Published : 07 May 2022 05:06 AM
Last Updated : 07 May 2022 05:06 AM
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதையடுத்து, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரசு மற்றும் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடந்தது. இதில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, மே 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
பின்னர், தலைமைச் செயலகத்துக்கு சென்று முதல்வர் பொறுப்பை ஏற்ற மு.க.ஸ்டாலின், பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். மேலும், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் கடந்த ஓராண்டில் செயல்படுத்தினார்.
சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெறுகிறார்.
பின்னர், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார். அதன்பின் சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு தமிழக அரசு சார்பில் 12 நூல்களை முதல்வர் வெளியிடுகிறார்.
திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெற்று 2-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி சட்டப்பேரவை வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் ஓராண்டு சாதனை விழாவில், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர். அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT