

`பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்திலேயே, அமைச்சர் சண்முகநாதனை மீண்டும் வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்துள்ளார்’ என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசனை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஏரலில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகநாதனை பற்றி எல்லோருக்கும் தெரியும். முதலில் வேறொருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் சண்முகநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணம் அவரிடம் உள்ளது. அந்த பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்திலேயே, அவரை மீண்டும் வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சண்முகநாதனின் உதவியாளர் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக அல்லது தேர்தல் முடிந்த பிறகு சண்முகநாதனும் சிறை செல்வது உறுதி. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசன் நேர்மையானவர். ஒரு பைசா லஞ்சம் வாங்கினார் என்று யாராவது கூற முடியுமா? தனது சொத்தை விற்று அரசியல் செய்து வருகிறார். மக்களை ஏமாளிகள் என்று நினைத்து தான் சண்முகநாதன் போன்றவர்களை மீண்டும் வேட்பாளர்களாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர்களுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.