

மக்களைப் பற்றி கவலைப்படாத ஜெயலலிதா நிரந்தர ஓய்வெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில், தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து நேற்றிரவு கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:
இந்தத் தேர்தல், சிறந்த தாய் யார் என்பதற்கான தேர்தலா?, தமிழகத்துக்கு நல்ல முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலா? என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். ஓய்வு எடுப்பது மட்டுமே தனது வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவர்தான் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் கூட மக்களைச் சந்திக்காதவர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆறுகள், ஏரிகள் தூர்வாரப்படவில்லை. தூர்வாரியதாக கணக்கு மட்டுமே எழுதப்பட்டுள்ளது. தஞ்சையில் மட்டுமே 350 நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில், ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவேன் என்று ஜெயலிலதா பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறார். மக்களைப் பற்றி கவலைப்படாத ஜெயலலிதா, அரசியலில் நிரந்தர ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் கனிமொழி.