Published : 07 May 2022 06:09 AM
Last Updated : 07 May 2022 06:09 AM

ரயில்வே தேர்வு எழுதுபவர்களுக்காக திருநெல்வேலி, மங்களூருவிலிருந்து சேலம் வழியே சிறப்பு ரயில்

சேலம்: ரயில்வே தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் வசதிக்காக சேலம் வழித் தடத்தில் திருநெல்வேலி, மங்களூருவில் இருந்து மேலும் இரண்டு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் ரயில்வே பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு பணிக்கான எழுத்துத் தேர்வு வரும் 9-ம் தேதி நடக்கிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் வசதிக்காக தேர்வு மையம் உள்ள வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறப்பு ரயில்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது.

சேலம் வழியே கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுகிறது. இந்நிலையில், சேலம் வழியே மேலும் 2 சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மங்களூரு-பெலகாவி சிறப்பு ரயில் (06042), இன்று (7-ம் தேதி) இயக்கப்படுகிறது. மங்களூருவில் இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காசர்கோடு, பையனூர், கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியே சேலத்துக்கு மறுநாள் காலை 9.17 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு பாங்காரூபேட்டை, பனாஸ்வாடி வழியே பெலகாவிக்கு 9-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில்,பெலகாவி-மங்களூரு சிறப்பு ரயில் (06041), வரும் 9-ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு, சேலத்துக்கு அடுத்தநாள் மதியம் 12.10 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், திருப்பூர், ஈரோடு, கோவை வழியே மங்களூருவுக்கு இரவு 10.50 மணிக்கு சென்றடைகிறது.

இதேபோல், திருநெல்வேலி-மைசூர் சிறப்பு ரயில் (06039) இன்று (7-ம் தேதி) இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இரவு 10.10 மணிக்கு புறப்படும். இந்த ரயில், நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம். ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை. திருப்பூர், ஈரோடு வழியே சேலத்துக்கு அடுத்தநாள் மதியம் 12 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 3 நிமிடத்தில் மீண்டும் புறப்பட்டு பெங்களூரு வழியே மைசூருக்கு இரவு 11.55 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், மைசூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06040), வரும் 10-ம் தேதி இயக்கப்படுகிறது. மைசூரில் இரவு 8.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்துக்கு அடுத்தநாள் அதிகாலை 5.30 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு,எர்ணாகுளம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியே திருநெல்வேலிக்கு 12-ம் தேதி இரவு 9.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x