

சென்னை: சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் தேமுதிக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோடைகாலத்தை முன்னிட்டு மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், அலுவலகம் முன் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள், பேருந்து பயணிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு தண்ணீர் குடித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த தண்ணீர் பந்தல் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் தண்ணீர் பந்தல் மற்றும் அதிலிருந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா படங்கள் இடம்பெற்றிருந்த பேனர் ஆகியவை சேதமடைந்தன. தண்ணீர் பந்தலை மர்ம நபர்கள் தீவைத்துக் கொளுத்தியது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்டமாக, அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடும் நடவடிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைமை அலுவலகம் முன் ஏப்ரல் 14-ம் தேதி முதல் செயல்பட்டு வந்த தண்ணீர் பந்தலில் மோர், வெள்ளரி, தர்பூசணி வழங்கப்பட்டன.
இந்நிலையில், தண்ணீர் பந்தலுக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்தது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுகிறது.
எனவே, இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நேரிடாத வகையில், பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.