

சென்னை: மாதவரம் பகுதியில் மக்கள் கருத்து கேட்கப்பட்டு வீட்டுவரி சீரமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் பேசும்போது, “மாதவரம் தொகுதியில் சென்னை மாநகராட்சிக்கு அருகில் புழல் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், மாநகராட்சியில் 1,246 தெருக்களில் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். மாநகராட்சியின் பிரதான பகுதிகளில் பணக்காரர்களுக்கு வீட்டுவரி சதுரஅடிக்கு ரூ.1 மற்றும் 1.50 என இருக்கும்போது, மாதவரம் பகுதியில் ரூ.3 என வசூலிக்கப்படுகிறது. இதைக் குறைக்க வேண்டும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ கணபதி, “எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சியின் 15 வார்டுகள் உள்ளன. அருகில் உள்ள வானகரம், அயப்பாக்கம் உள்ளிட்ட 3 ஊராட்சி பகுதிகளையும் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்” என்றார்.
இவற்றுக்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் முடிந்து தலைவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் பதவிக்காலம் முடியும் முன்னர் ஊராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைக்க இயலாது. அப்படி இணைக்க வேண்டியது அவசியம் என்றால், அந்த தலைவர்கள் விரும்பும் நிலையில், அதற்கான நடவடிக்கைகள் முதல்வரின் அனுமதி பெற்று மேற்கொள்ளப்படும்.
மேலும், ஊராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைப்பதில் இரு சிக்கல்கள் உள்ளன. ஒன்று அந்த ஊராட்சி அமைப்புகளின் பதவிக்காலம், இரண்டாவது ஊராட்சிகள் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலைத்திட்டத்தை அவர்கள் இழக்க வேண்டி வரும். இதனால், பொதுமக்களே எதிர்க்கின்றனர்.
தற்போது மாதவரம் தொகுதியில் மணலி, சின்ன சேர்க்காடு ஆகிய இடங்களில் ரூ.243.36 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் 40 சதவீதம் முடிந்துள்ளன. வரும் ஜூன் 30-க்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும். இந்த பணிகளுக்காக அங்குள்ள 1,200-க்கும் மேற்பட்ட சாலைகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. அதேபோல, வீட்டு வரியைப் பொறுத்தவரை, மக்கள் கருத்துகளை மாநகராட்சி ஆணையர் கேட்க உள்ளார். அதன் அடிப்படையில் வரி சீரமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.