Published : 07 May 2022 06:12 AM
Last Updated : 07 May 2022 06:12 AM

சுற்றுலா மானிய கோரிக்கையில் ‘கண்டுகொள்ளப்படாத’ கொடைக்கானல் - மலை கிராம சுற்றுலாத் திட்டம் என்ன ஆனது?

கொடைக்கானல்: சுற்றுலாதுறை மானிய கோரிக்கையின் போது அறிவிப்பில் கொடைக்கானலுக்கு எதிர்பார்த்த திட்டங்கள் ஏதும் இல்லாதால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பல திட்டங்கள் வாக்குறுதிகளாகவே இன்னமும் தொடர்கின்றன.

தமிழகத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சுற்றுலாத்தலங்களில் ஊட்டியை அடுத்து கொடைக்கானல் உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவையில் நடந்த சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் கொடைக்கானலுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படாதது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

பலநிலை வாகன நிறுத்துமிடம்

கொடைக்கானலின் நீண்ட கால பிரச்சினையான போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க பல நிலை வாகன நிறுத்துமிடம் (மல்டி லெவல் கார் பார்க்கிங்) அமைக்கும் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. கடந்த ஆட்சியின்போது மலர் கண்காட்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் கொடைக்கானலில் மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்படும் என அறிவித்துச் சென்றார். தேர்தலின்போதும் அனைத்து கட்சிகளும் கொடைக்கானல் நகரில் கார் பார்க்கிங் அமைக்க உறுதியளித்தனர். இந்த ஆண்டும் இத்திட்டம் அறிவிக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகளை மட்டும் அல்லாமல் கொடைக்கானல் நகர மக்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

மலை கிராம சுற்றுலா

கடந்த ஆண்டுகளில் மலை கிராம சுற்றுலா குறித்து ஒரு குழு கொடைக்கானல் வந்து அறிக்கை தயாரித்து அரசுக்கு அளித்தது. மலை கிராம சுற்றுலா குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. கொடைக்கானலில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளங்கி மலை கிராமத்தில் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது. இங்குள்ள ‘ரிவர் வாக்’, ஒரு சில சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே தெரிந்ததாக உள்ளது. மலை கிராமத்தில் சமமான பகுதியில் ஓடும் ஓடையில் நீண்டதூரம் இங்கு நடந்தே செல்லலாம். இந்த ‘ரிவர் வாக்’ அனுபவம் பலரையும் ஈர்க்கும்.

பேத்துப்பாறை ஆதிமனிதன் கற்திட்டை, ஓராவி அருவி, வில்பட்டி மலை கிராமத்தில் பசுமை புல்வெளி என சுற்றுலாப் பயணிகள் புதிய இயற்கை எழிலான இடங்கள் மலை கிராமங்களில் கொட்டிக்கிடக்கிறது. இதற்கு அரசு எந்த நிதியும் செலவழிக்க தேவையில்லை. முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்தாலே போதும்.

இதன் மூலம் ‘ஹோம் ஸ்டே’ உள்ளிட்டவை மூலம் மலை கிராம மக்களின் பொருளாதாரமும் உயரும். இதற்கான அறிவிப்பு ஏதும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் இடம்பெறவில்லை.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கொடைக்கானல் மேல்மலைப் பகுதி மன்னவனூரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சூழல் சுற்றுலா மையத்தில் ஏற்கனவே பரிசல் சவாரி உள்ள நிலையில், சுற்றுலாத்துறை மூலம் படகு சவாரி, நீர் விளையாட்டுகள், திறந்தவெளி முகாம்கள் ஆகியவற்றுடன் பொழுதுபோக்கு நிறைந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொடைக்கானலை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்பாஸ் கூறுகையில், சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் கொடைக்கானலுக்கு என எதிர்பார்த்த திட்டங்கள் இல்லை. இதில் முக்கியமாக எதிர்பார்த்தது ‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ தான். இந்த அறிவிப்பு மானிய கோரிக்கையில் இடம்பெறவில்லை. ஒவ்வொரு முறையும் இந்த திட்டம் குறித்து உறுதி கூறுகிறார்கள். ஆனால் நிறைவேற்றுவதில்லை.

மலை கிராம சுற்றுலாவை அங்கீகரித்தால் கொடைக்கானலில் மேலும் சுற்றுலா வளர்ச்சி பெறும். இயற்கை எழில் கொட்டிக்கிடக்கும் கொடைக்கானல் மலையை முழுமையாக சுற்றுலாபயணிகள் ரசிக்க மலை கிராமங்களுக்கு அழைத்துச்செல்லும் வழிகாட்டுதல்களை சுற்றுலாத்துறை செய்ய வேண்டும். பார்த்த இடத்தையே ஆண்டுதோறும் பார்த்து செல்கின்றனர். மானிய கோரிக்கையில் கொடைக்கானலுக்கு என சொல்லிக்கொள்ளும்படி எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளது, என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x