Published : 07 May 2022 04:24 AM
Last Updated : 07 May 2022 04:24 AM

திராவிட மாடலில் 100 ஆண்டுகால திராவிட கொள்கைகளை செயல்படுத்தும் முதல்வர் - வேல்முருகன் பாராட்டு

கடலூர்: திராவிட மாடல் என்ற பெயரில் 100 ஆண்டுகால திராவிட இயக்கம் வகுத்துள்ள கொள்கைகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் படிப்படியாக செயல்படுத்தி வருகிறார். தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதை விட தமிழகத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற முதல்வரின் முயற்சியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டுகிறது என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி கண்டு, மே 7, 2021-ல் ஆட்சி அமைத்து ஓராண்டை நிறைவு செய்யவிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு. தமிழகத்தின் வளர்ச்சியும், சமூக நீதியும் ஒரே நிலையில் சமமாக கொண்டு செல்லப்படுவதோடு, கடந்த ஓராண்டு ஆட்சியில் மாநில அரசின் நிதிநிலையை கையாள்வது, முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவற்றில் திமுக அரசின் செயல்பாடுகள் போற்றத்தக்கது. இந்தியாவில் பிற மாநிலங்களில் பார்க்க முடியாத பல சாதனைகளை முதல்வர் ஸ்டாலின் நிகழ்த்தி வருகிறார். எதிர்பார்த்திராத அளவிற்கு மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு வருவதோடு, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். தமிழ், தமிழகம், தமிழர்கள் என்ற முக்கிய நோக்கத்தை நிறைவேற்றுவதோடு, திராவிட மாடல் என்ற பெயரில் 100 ஆண்டுகால திராவிட இயக்கம் வகுத்த கொள்கைகளையும் படிப்படியாக செயல்படுத்தி வருகிறார்.

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம் ஆகியவை பதவியேற்ற அடுத்த நிமிடத்திலேயே செயல்படுத்தியுள்ளார்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட குழு அமைப்பு, பெண் காவலர்களின் நலன் கருதி நீண்ட நேரம் நிற்கும் பாதுகாப்புப் பணியில் இருந்து விடுவிடுப்பு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையில் இருந்த ஓய்வூதியப் பலன்கள் விடுவிக்க நடவடிக்கை, இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி, டெல்டா விவசாயிகளுக்கு ரூ.61.09 கோடி மதிப்பிலான குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் உள்ளிட்டவை இந்த ஓராண்டின் சாதனைகள்.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும், தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் வகையில், தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித்தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் வாயிலாக, தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசுப்பணி கனவை முதல்வர் நிறைவேற்றி வைத்திருப்பது வரவேற்கதக்கது.

மருத்துவம் போன்றே, பிற இளநிலைத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசின் 50 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில், மருத்துவக் கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு என்பது சமூக நீதியைப் பாதுகாக்க வழங்கப்பட்டுள்ள மகத்தான உத்தரவு. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, சமூக நீதியின்பால் பற்று கொண்ட திமுகவுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி.

1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 4 கோடியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு பாராட்டுக்குரியது. இலங்கை அகதிகள் முகாம் என்பது ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’எனப் பெயர் மாற்றம், மறுவாழ்வு முகாமில் வாழும் தமிழர்களுக்காக ரூ. 225 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் அறிவிப்பு வரவேற்கதக்கது.

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சமூகநீதியை காத்து வரும் திமுக அரசு, தீண்டாமையை ஒழிக்கும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், ஸ்டெர்லைட், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை, சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திமுக அரசு திரும்பப் பெற்றது.

இனிமேல் தமிழகத்தில் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்குத் தான் உள்ளது. அந்த அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்கின்ற துணிவு மிக்க தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய முதல்வரின் துணிவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டுகிறது.

தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதை விட தமிழகத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற முதல்வரின் முயற்சிக்கு பாராட்டுக்களை கூறுவதோடு, தனது ஓராண்டு கால ஆட்சியை சிறப்பாக நடத்திய முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x