Last Updated : 07 May, 2022 02:36 AM

 

Published : 07 May 2022 02:36 AM
Last Updated : 07 May 2022 02:36 AM

புதுச்சேரியில் இன்னும் சில ஆண்டுகளில் குடிநீர் நிலை மோசமாக பாதிக்கப்படும்: முதல்வர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரி: மாநிலத்தில் குடிதண்ணீரின் நிலைமையைப் பார்த்தால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மோசமாக பாதிக்கப்படும். அதற்கு ஏற்றவாறு இப்போதே நாம் திட்டமிட்டு நல்ல குடிநீர் எப்போதும் கிடைக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் காலநிலை மாற்றப்பிரிவு, சுற்றுச்சூழல் தகவல் மையம் மற்றும் புதுடெல்லி எரிசக்தி மற்றும் வள நிறுவனம் சார்பில் ‘‘புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி திட்டத்தில் காலநிலை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்’’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நூறடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வந்தது.

அதன் நிறைவு விழா வெள்ளிக்கிழமை (மே. 6) மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துறை செயலர் சுமித்தா தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: ‘கிளீன் அண்டு கிரீன்’ புதுச்சேரி என்று சொல்கிறோம். ஆனால் அப்படி இருக்கிறா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். என்னை பொறுத்தவரை சரியாக இல்லை என்பது தான் எனது எண்ணம். இன்னும் நிறைய சரி செய்ய வேண்டும். பசுமையான நிலையும் இப்போது குறைந்துள்ளது. அந்த பசுமையை நாம் உருவாக்க வேண்டும்.

நாம் திட்டமிடும் போதும், செயல்படுத்தும் போதும் முழுமையான பயன் நமக்கு கிடைக்கும். சிறிய மாநிலமான புதுச்சேரியில் மக்கள் தொகை பெருகியுள்ளது. முக்கிய சாலைகளில் செல்ல முடியாத வகையில், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் காற்றில் எவ்வளவு மாசு ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். நமது ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் முழுமையாக செய்திருக்கிறோமா என்றால் இல்லை. இதனால் நல்ல குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பல இடங்களில் உப்புநீர் உட்புகுந்துவிட்டது. எனவே நல்ல குடிநீர் கிடைக்க வேண்டும் என்றால் நீர்நிலைகளை பாதுகாத்து பாராமரிக்க வேண்டும். அதற்குரிய திட்டங்கள் நமக்கு சரியாக இருக்கவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில், குடிதண்ணீரின் நிலையை பார்த்தால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் மோசமாக பாதிக்கப்படும். அதற்கு ஏற்றவாறு இப்போதே நாம் திட்டமிட்டு நல்ல குடிநீர் எப்போதும் கிடைக்க, நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதேபோன்று திடக்கழிவு மேலான்மை குறித்து தொடர்ச்சியான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. அது முழுமையாக இருக்கிறதா என்றால் இல்லை. இதில் சம்மந்தப்பட்ட துறையினர் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அது இன்றைய காலநிலை சூழலுக்கு ஏற்ப அனைத்து துறையினரும் இணைந்து செயல்படுவது முக்கியம். சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் அரிப்பு ஏற்பட்டது. அதற்கு கடற்கரைகளில் கற்கள் கொட்டி பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளோம்.

தொடர்ந்து அதனை பாதுகாப்பது முக்கியமானது. அதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வர வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறோம். அரசு புதுச்சேரி மக்களின் பாதுகாப்பு நலன் கருதி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனை அந்தந்த துறைகள் திட்டமிட்டு சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்’’ இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.

முதுநிலை அறிவியல் அதிகாரி சகாய ஆல்பரட், சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், விஞ்ஞானி விபின் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் பொறியாளர் காலமேகம் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x