Published : 07 May 2016 08:09 AM
Last Updated : 07 May 2016 08:09 AM

ஆவடி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் வேட்பாளர்கள்: பல்வேறு வாக்குறுதிகளுடன் வலம் வருகின்றனர்

ஆவடி தொகுதியில் மெட்ரோ ரயில் சேவை, ஐடி பார்க், நவீன அடுக்குமாடி வாகன நிறுத்தம், சுற்றுலா படகு குழாம், சிந்தனையாளர்கள் மன்றம், நீதிமன்றம் அமைத்தல் என பல்வேறு வித்தியாசமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆவடி தொகுதி, தொகுதி மறுசீரமைப்பின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு பூந்தமல்லி தொகுதியில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு நடைபெற்ற முதல் தேர்தலில் அதிமுக வேட்பாளரும் தற்போதைய மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான அப்துல் ரஹீம் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் ராணுவ பீரங்கிகள் மற்றும் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மத்திய ரிசர்வ் காவல்படை, விமானப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்கள் மற்றும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு பணிபுரிந்து வருவதால் ஆவடி நகரம் ஒரு ‘காஸ்மோபாலிட்டன்’ நகரமாக திகழ்கிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் கா.பாண்டியராஜன், திமுக சார்பில் சா.மு.நாசர், மக்கள் நலக்கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் அந்திரிதாஸ், பாஜக சார்பில் ஜே.லோகநாதன், பாமக சார்பில் ந.ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான கட்சி வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

ஐடி பார்க் (அதிமுக)

ஆவடி சேக்காடு பகுதியில் பிரச்சாரத் தில் ஈடுபட்டிருந்த அதிமுக வேட்பாளர் க.பாண்டியராஜன் தனது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கூறும்போது, ‘‘நல்லதொரு குடும்பம் என்ற புதிய திட்டத்தின்படி, ஆவடி தொகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீ்ழ் வசிக்கும் 8 ஆயிரம் குடும்பங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வளமான வாழ்வு அளிக்கப்படும். சிறு, நடைபாதை வியாபாரிகள் பயனடையும் வகையில் உழவர் சந்தையில் அவர்களுக்கு கடைகள் தரப்படுவதோடு குளிபர்பதனக் கிடங்கு அமைத்துத் தரப்படும். ஆவடி முதல் திருவேற்காடு வரை மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படும். ஆவடியில் உலகத் தரத்திலான மென்பொருள் பூங்கா (ஐடி பார்க்) அமைக்கப்படும். வேலைவாய்ப்பு முகாம் கள் நடத்தி படித்த இளைஞர்கள் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

சுற்றுலா படகு குழாம் (திமுக)

பட்டாபிராம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக வேட்பாளர் சா.மு.நாசர், ‘‘கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆவடி நகர்மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறேன். மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்ட ரூ.262 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவு பெற்று இன்னும் 6 மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதைத் தவிர, ரூ.320 கோடி மதிப்பில் சாலைகள், சிமென்ட் சாலை கள், மழைநீர் கால்வாய்கள், சிறு பாலங்கள், தெருவிளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆவடி ஏரியில் நடைமேடையுடன் கூடிய சுற்றுலா படகு குழாம், நீச்சல்குளம், அரசு கலைக் கல்லூரி, நவீன அடுக்கு வாகன நிறுத்து மிடம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றுவேன்’’ என்றார்

போக்குவரத்து மேலாண்மை (மதிமுக)

திருமுல்லைவாயல் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள்நல கூட்டணியைச் சேர்ந்த மதிமுக வேட்பாளர் இரா.அந்திரிதாஸ் கூறும்போது, ‘‘சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், பல்துறை ஆர்வலர்கள் என 100 பேரை கொண்ட ஆவடி சிந்தனையாளர்கள் மன்றம் ஏற்படுத்தப்பட்டு அக்குழு பரிந்துரைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆவடியில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தொலைநோக்கு பார்வையுடன் போக்குவரத்து மேலாண்மை நிறுவப்படும். 14 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சதர்ன் ஸ்டரக்சர்ஸ் ஆலையை மறுசீரமைப்பு செய்து மீண்டும் தொடங்கப்படும். திருநின்றவூர், திருவேற்காடு பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்’’ என்றார்.

ஆன்மிக தலமாக்குவோம் (பாஜக)

ஆவடி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ஜே.லோகநாதன் கூறும்போது, ‘‘ஆவடியில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தியுள்ளேன். இது உடனடியாக நிறைவேற்றப்படும். திருவேற்காடு, திருநின்றவூரில் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும். பட்டாபிராம் சிடிஎச் சாலையில் லெவல் கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கப்படும். தேவி கருமாரியம்மன், வேதபுரீஸ்வரர் ஆலயங்கள் அமைந்த திருவேற்காடு நகரம் ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு அதற்கான அனைத்து வசதிகளையும் பெற்றிட வழிவகை செய்யப்படும். செங்கல்பட்டு கோட்டத்தில் உள்ள திருநின்றவூர் மின்வாரியப் பகுதியை சென்னை மின்பகிர்மான வட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ரயில் நிலைய சுரங்கப்பாதை (பாமக)

திருவேற்காட்டில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாமக வேட்பாளர் ந. ஆனந்தகிருஷ்ணன், ‘‘அனைத்துப் பகுதிகளிலும் எல்இடி மின் விளக்குகள் அமைக்கப்படும். ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தனியாக ஏற்படுத்தப்படும். பாதாள சாக்கடை திட்டத்தை நவீன தொழில்நுட்பத்தில் சீரமைத்து செயல்படுத்தப்படும். குடிநீர், சாலை, மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x