Published : 06 May 2022 08:45 PM
Last Updated : 06 May 2022 08:45 PM

தாம்பரத்தில் பூங்காக்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை

தாம்பரம்: கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் புதர் காடாக மாறிய தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பூங்காங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 70 வாா்டுகள் உள்ளன. இதில் 209 பூங்காக்கள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்களுடன், பொதுமக்கள் நடைபாதையில் செல்லும் வகையில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட தளத்துடன் கூடியதாக அந்த பூங்காக்கள் அமைக்கப்பட்டன.

இந்தப் பூங்காக்கள் போதிய பராமரிப்பின்றி இருந்தபோதிலும், பொதுமக்கள் தொடர் பயன்பாட்டில் இருந்த காரணத்தால் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் இந்த பூங்காக்களும் அடைக்கப்பட்டன.

பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததை அடுத்து, பெரும்பாலான பூங்காக்கள் புதா்கள் நிறைந்த பகுதியாக மாறின. மேலும், அங்குள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. பல பூங்காக்கள் புதர் மண்டி, விஷ ஜந்துகளின் புகலிடமாக உள்ளன. உடனடியாக சிறுவர் பூங்காவை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஏழுமலை கூறியது: "பூங்காங்கள், பயன்பாட்டில் இருந்தவரை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை வந்து செல்லும் இடமாக இருந்தன. தற்போது புதா் மண்டி கிடக்கும் பூங்காக்கள் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறிவிட்டன."

இதே நிலை நீடித்தால், அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் சிறிது சிறிதாக திருடு போவதற்கும் வாய்ப்புள்ளது. மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காக்களை உரிய முறையில் பராமரித்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேயர் வசந்த குமாரி இதற்கு தீர்வு காணவேண்டும் என்றனா்.

- ஸ்டாலின்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x