

சென்னை: சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக முதல்வர் சட்டபேரவையில் குறிப்பிட்ட செய்தியும், தற்போது விக்னேஷின் உடற்கூராய்வு அறிக்கையில் வெளியாகியுள்ள செய்தியும் முரண்பட்ட காரணத்தால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி, சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்குநிலை குறித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் பதிலளித்துப் பேசினார். இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் , "பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரையும், விசாரணைக்காக தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் விக்னேஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இந்த மர்ம மரணம் குறித்து சட்டப்பேரவையில் நான் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதற்கு முதல்வரும் பதிலளித்தார்.
முதல்வர் பதிலளிக்கும்போது, மர்மமான முறையில் விக்னேஷ் இறந்ததாகவும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நாளன்று முதல்வர் அளித்தப் பதிலில், 19.4.2022 அன்று விக்னேஷ் மற்றும் சுரேசுக்கு காலை உணவு வழங்கப்பட்டதாகவும், விக்னேஷ் சாப்பிட்ட பின்னர், வாந்தியெடுத்து வலிப்பு வந்தவுடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும், மேல் சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறினார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையின்போது, விக்னேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
ஆனால், இன்று விக்னேஷின் உடற்கூராய்வு அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் விக்னேஷ் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், முகத்தின் தாடைப்பகுதி, தோள்பட்டை, இடதுதொடை பகுதியின் மேல்பகுதி முதல் கீழ் முட்டிவரை என 13 இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், வலதுகால் எலும்பு முறிவு மற்றும் பாதங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே முதல்வர் சட்டமன்றத்தில் விக்னேஷ் மரணம் தொடர்பாக குறிப்பிட்ட செய்தியும், தற்போது விக்னேஷின் உடற்கூராய்வு அறிக்கையில் வெளியாகியுள்ள செய்தியும் முரண்பட்ட காரணத்தால், இந்த வழக்கு நேர்மையாக முறையாக விசாரிக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், முதல்வர் எங்களது கோரிக்கையை ஏற்காமல், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் சிபிஐயிடம் இந்த வழக்கை ஒப்படைத்தால்தான் வழக்கு முறையாக நடைபெறும்.
முதல்வர் இந்த வழக்குக் குறித்து பேசும்போது பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால், கொலை வழக்காகப் பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார். முதல்வரே கொலை வழக்காகப் பதிவு செய்யப்படும் என கூறும்போது, இந்த வழக்கை தமிழக போலீஸாரே விசாரித்தால், இந்த விசாரணை நியாயமான முறையாக நடைபெறாது. நியாயம் கிடைக்காது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வெளிநடப்பு செய்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
மேலும், "தருமபுரம் ஆதீனத்தை பழிவாங்கும் நோக்குடன் பட்டிணப்பிரவேச நிகழச்சிக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அந்த நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.