

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களின் தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும் என்று விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், "முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தனி விளையாட்டு மைதானம் அமைக்க இந்த அரசு ஆவன செய்யுமா" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன்,"தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் உறுப்பினர்களுக்கு அவர்களின் தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரப்படும்" என்று பதில் அளித்தார்.