Published : 06 May 2022 08:03 AM
Last Updated : 06 May 2022 08:03 AM

10 கல்லூரிகளில் இந்த ஆண்டு பிஎச்டி படிப்பு தொடங்கப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 10 கல்லூரிகளில் பிஎச்டி படிப்புகள் தொடங்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறைஅமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சு.ரவி பேசும்போது, ‘‘அரக்கோணம் தொகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 1,700 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் முதுநிலைக் கல்வி முடிக்கும் நிலையில், எம்.பில்., பிஎச்டி படிப்புகள் அங்கு இல்லை. தகுதியான ஆசிரியர்கள் இருப்பதால், எம்.பில்., பிஎச்டி படிப்புகளை கொண்டுவர வேண்டும்’’ என்றார்.

இதேபோல, குமாரபாளையம் உறுப்பினர் பி.தங்கமணி, ‘‘தனியார் கல்லூரிகளில் படிப்புகளை இடையில் கைவிடும் சூழலில், முழு கட்டணமும் செலுத்தினால்தான் சான்றிதழ்களைத் தருவோம் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இதனால் அந்த மாணவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதற்கு உரிய தீர்வுகாண வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

பொதுவாக உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் கல்லூரி அல்லது கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடங்குவது குறித்து கேட்கின்றனர். இந்த ஆண்டு 10 கல்லூரிகளில் பிஎச்டி படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் உறுப்பினர் ரவி, தனது தொகுதியில் உள்ளகல்லூரியில் இட வசதி, பேராசிரியர்கள் இருப்பதாக கூறியுள்ள நிலையில், அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

தனியார் கல்லூரிகளில் இடைநிற்கும் மாணவர்கள் பாதிஅளவு கட்டணத்தை செலுத்தி,சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

இதுபோன்ற சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணுமாறு, கல்லூரிகளுக்கு நாங்களும் அறிவுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x