Published : 06 May 2022 07:59 AM
Last Updated : 06 May 2022 07:59 AM

கலை, பாரம்பரியத்தை எடுத்துக்காட்ட அரசு சார்பில் ‘தமிழகத்தின் செல்வங்கள்’ கையேடு வெளியீடு

சென்னை: தமிழக அரசின் ஒவ்வொரு துறைசார்பிலும், துறையின் சாதனைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பொக்கிஷங்கள் அடங்கியகையேடுகள் வெளியிடப்படுகின்றன. இதில், சமீபத்தில் தமிழக நீர்வளத் துறை வெளியிட்ட கையேடுமிகுந்த வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது கலை, பண்பாடு, அறநிலையங்கள், சுற்றுலா துறைகள் சார்பில் ‘தமிழகத்தின் செல்வங்கள்’ என்ற கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் முதல் பகுதியான சுற்றுலாவில், ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் நடத்தப்படும் இந்திய நாட்டியத் திருவிழா, ஜல்லிக்கட்டு, சர்வதேச பலூன்திருவிழா, நீர்ச்சறுக்கு விளையாட்டு, தமிழக யானைகள், நீலகிரி மலை ரயில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை,வேளாங்கண்ணி, நாகூர், மலைக்கோட்டை, செட்டிநாடு இல்லங்கள், ஆரோவில் உள்ளிட்டவை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

அறநிலையத்துறை பகுதியில், துறையின் பல்வேறு நிகழ்ச்சிகள், பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம், கும்பகோணம் சாரங்கபாணி, சென்னைகபாலீஸ்வரர், திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், பழநி, மதுரை மீனாட்சிஅம்மன், அழகர்கோவில், நவக்கிரக கோயில்கள் என பல்வேறு ஆலயங்கள், அவற்றின் சிறப்புகள் அழகுற படமாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலை, பண்பாடு பகுதியில், சமீபத்தில் நடத்தப்பட்ட நம்ம ஊரு திருவிழா, தஞ்சாவூர் பொம்மைகள், திருபுவனம் சேலைகள், வீணை, பரதம், தெருக்கூத்து, தேவராட்டம், பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு, குலசை தசரா என பல்வேறு பாரம்பரிய கலைகள் வண்ணபுகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

அருங்காட்சியகங்கள் பகுதியில், பூமராங் கருவி, செப்பேடுகள், சரஸ்வதி மஹால் நூலகம்,வீரக்கற்கள், தஞ்சை அருங்காட்சியகம் உள்ளிட்ட கலைப்பொக்கிஷங்கள், அருங்காட்சியகங்கள் இடம்பெற்றுள்ளன.

நிறைவாக தொல்லியல் துறைபகுதியில், தமிழர்களின் தொன்மையை விளக்கும் சடையார்கோவில், கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர், இரட்டை கோயில், கொடுமணல், தரங்கம்பாடி கோட்டை,வெம்பக்கோட்டை, தஞ்சாவூர்அரண்மனை, சிவகளை, உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

முழுமையாக வண்ணப் படங்களுடன், ஏராளமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ள ‘தமிழகத்தின் செல்வங்கள்’ என்றஇந்த கையேடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x