

சென்னை: மாமல்லபுரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற, ரூ.2.50கோடி மதிப்பிலான 3 உலோக சுவாமி சிலைகளை போலீஸார் மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொன்மைவாய்ந்த புராதனப் பொருட்கள், சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், அங்குள்ள தனியாருக்குச் சொந்தமான கலைப்பொருட்கள் விற்பனை நிறுவனத்தில், வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வதற்காக தொன்மையான உலோக சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின்பேரில், ஐ.ஜி. தினகரன் வழிகாட்டுதலின்படி, கூடுதல் கண்காணிப்பாளர் அசோக் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மாமல்லபுரத்தில் உள்ள நிறுவனத்தில் தனிப்படை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வதற்காக, உலோகத்திலான நின்ற நிலையில் உள்ள பார்வதி அம்மன் சிலை (உயரம்- 97 செ.மீ. அகலம்- 23 செ.மீ. எடை- 26 கிலோ 400 கிராம்), அமர்ந்த நிலையில் உள்ள பார்வதி அம்மன் சிலை ( உயரம்- 32 செ.மீ. அகலம்- 20 செ.மீ. எடை- 8 கிலோ 400 கிராம்), நடனமாடும் சிவன் சிலை (உயரம்- 35 செ.மீ. அகலம்-26 செ.மீ. எடை-7 கிலோ 500 கிராம்) ஆகிய 3 புராதன சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 3 சிலைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அந்த சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கோயிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, கோயிலில் சுவாமி சிலைகள் திருடுபோனது தொடர்பான வழக்குகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். தற்போது மீட்கப்பட்டுள்ள சுவாமி சிலைகளின் மதிப்பு ரூ.2.50 கோடிக்கு மேல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிலை கடத்தல் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லவிருந்த சிலைகளை மீட்ட, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாரை தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார்.