

சென்னை: சென்னையைச் சேர்ந்த போலீஸார் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து ரூ.1.45 கோடியை இழந்துள்ளதாகவும், அதில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் எனவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போலீஸாருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி காவலர் ஒருவர் ‘ஆன்லைன் ரம்மி’ சூதாட்டத்தில் தனது சேமிப்புகளை இழந்ததால், தன்னுடைய இன்னுயிரை நீத்தார். அப்போதே இதுபோன்ற தீய பழக்கங்களில் போலீஸார் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தேன். அதை நீங்கள் கடைப்பிடித்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.
தற்போது ‘கிரிப்டோ கரன்சி’ மற்றும், அதை சார்ந்த பண மதிப்பு முதலீடுகளில் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டலாம் என்று சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இதை நம்பி சில போலீஸார் பணம் மற்றும் சேமிப்பை இழந்து, இன்னுயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களது குடும்பத்தினர், ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, வாழ்வாதாரமின்றித் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, நமது காவல் துறையில் பணியாற்றும் 2 போலீஸார் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்கள், சமூக வலைதளங்களில் வந்த குறுஞ்செய்தியை நம்பி, கிரிப்டோ கரன்சியில் பல தவணைகளில் முதலீடு செய்து ரூ.1 கோடியே 44 லட்சத்து 67 ஆயிரத்து 136-ஐ இழந்துள்ளனர்.
தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதைக் கூட அறியாமல், பெருந் தொகையை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து, தொடர்ச்சியாக ஏமாந்துள்ளனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய போலீஸாரில் சிலர் இதுபோன்ற போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாறுகிறார்கள். எனவே விழிப்புணர்வுடன் இருந்து, பண முதலீடுகளை கவர்ந்து இழுக்கும் சமூக வலைதளங்களின் ஆசை அறிவிப்புகளுக்கு மயங்காமல் இருக்க வேண்டும்.
நியாயமான முறையில் தங்களது சேமிப்புகளை தரமான வங்கி மற்றும் முதலீடுகளில் செலுத்தி, ஆதாயம் பெற வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய போலீஸாரில் சிலர் இதுபோன்ற போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாறுகிறார்கள்.