Published : 06 May 2022 06:49 AM
Last Updated : 06 May 2022 06:49 AM
கொடைக் கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் தினமும் மாலையில் பெய்துவரும் கோடை மழையால் வனவிலங்குகளுக்கு தீவனப் பிரச்சினை, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டதுடன், காட்டுத்தீ பரவுவதும் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகளவில் பெய்தது. இதனால் 80 சதவீத நீர்நிலைகளில் மழைநீர் தேங்கியது. மீதமுள்ள 20 சதவீத நிலைகளில் முறையான வரத்து வாய்க்கால், பராமரிப்பு இல்லாததால் ஓரளவே மழை நீர் தேங்கியது.
நீர்நிரம்பிய 80 சதவீத நீர்நிலைகளில் இன்றும் குறிப்பிடத்தக்க அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதற்கு காரணம் பகலில் வெயிலின் தாக்கம் அதிகம்இருந்தபோதும், மாலையில் அவ்வப்போது மழை பெய்வதால் நீர்மட்டம் இறங்காமல் உள்ளது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகளில் பெரும்பாலானவற்றில் பாதிக்கும் மேல் நீர் உள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலில் கோடைக்காலம் தொடக்கமான மார்ச் இறுதிவாரத்தில் மலைப் பகுதிகளில் புற்கள், செடிகள் காய்ந்து காட்டுத்தீ பரவியது. மிகுந்த சிரமத்துக்கிடையே காட்டுத் தீ பரவுவதை வனத்துறையினர் கட்டுப்படுத்தி வந்தனர். ஒரு பகுதியில் கட்டுப்படுத்தினாலும் மறுபகுதியில் காட்டுத்தீ பரவுவது தொடர்ந்தது.
இந்நிலையில் சமீப நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் காட்டுத்தீ பரவுவது முற்றிலும் நின்றது.
மலைப்பகுதியில் புற்கள், செடிகள் செழித்து வளர்ந்துள்ளதால் வனவிலங்குகளின் தீவனப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளது. அதோடு மலையில் உள்ள காட்டாறுகள், குளங்களில் தண்ணீர் இருப்பதால் வனவிலங்குகளின் தண்ணீர் பற்றாக்குறை நீங்கியது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலையில் மழை பெய்துவருகிறது. மே 3-ம் தேதி காலை வரை 24 மணி நேரத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் 11 மி.மீ. மழை பெய்தது. மே 4-ம் தேதி காலை வரை 10 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலை 8 மணி வரை 18 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தின் பிற பகுதிகளான வேடசந்தூரில் 25 மி.மீ., திண்டுக்கல்லில் 4 மி.மீ., காமாட்சிபுரத்தில் 85 மி.மீ., நத்தத்தில் 6 மி.மீ. மழை பெய்தது.
பகலில் வெயிலின் தாக்கம், மாலையில் கோடை மழை என இருவேறு சீதோஷ்ணநிலை திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவுகிறது.
மலைப்பகுதிகளில் தொடர்மழையால் கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள மஞ்சளார் அணை, பாலாறு பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, மருதாநதி அணைகளுக்கு கோடைக்காலத்திலும் நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மலைப்பகுதியில் புற்கள், செடிகள் செழித்து வளர்ந்துள்ளதால் வனவிலங்குகளின் தீவனப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT