தென்காசி தொகுதியில் காங்கிரஸ், அதிமுக நேரடி போட்டி

தென்காசி தொகுதியில் காங்கிரஸ், அதிமுக நேரடி போட்டி
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தொகுதியில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ், அதிமுக இடையே நேரடிப் போட்டி உருவாகியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வீரகேரளம்புதூர் தாலுகா, தென்காசி தாலுகாவின் ஒரு பகுதி, தென்காசி நகராட்சி, சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, மேலகரம், குற்றாலம் பேரூராட்சிகள் மற்றும் 15 ஊராட்சிகளை உள்ளடக்கி பரந்து விரிந்திருக்கிறது இத் தொகுதி. இத் தொகுதியில் பரவலாக தேவர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கிறார்கள். விவசாயமே இத் தொகுதி மக்களின் பிரதான தொழிலாக இருக்கிறது.

1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் காங்கிரஸ் 7 முறை, திமுக, அதிமுக தலா 2 முறை, தமாகா, சமத்துவ மக்கள் கட்சி, சுயேச்சை வேட்பாளர் தலா ஒருமுறை வெற்றிபெற்றுள்ளனர்.

கடந்த 2006 தேர்தலில் திமுக வேட்பாளர் கருப்பசாமிபாண்டியனும், 2011-ல் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். சரத்குமாரும் வெற்றி பெற்றிருந்தனர். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி பலமுறை வெற்றிபெற்றுள்ளதால் இத் தொகுதியை காங்கிரஸ் கோட்டை என்று அக் கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இத் தேர்தலில் காங்கிரஸிலிருந்து தமாகா பிரிந்திருப்பதால் அதன் வாக்கு வங்கியில் பாதிப்பு இருக்குமா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.

தற்போதைய இத் தொகுதி தேர்தல் களத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 11 பேர் களத்தில் உள்ளனர். அவர்களில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் எஸ். பழனிநாடாருக்கும், அதிமுக வேட்பாளர் சி. செல்வமோகன் தாஸுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி உருவாகியிருக்கிறது.

கூட்டணி பலம்

காங்கிரஸுக்கு இத் தொகுதி யிலுள்ள செல்வாக்கு மற்றும் அதன் கூட்டணி பலத்துடன் வேட் பாளர் பழனிநாடார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியினருடன் தோழமை கட்சிகளான திமுகவினரும் புதிய தமிழகம் கட்சியினரும் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள அம்சங்களை வீடுவீடாகவும் சென்று காங்கிரஸார் விளக்கிக் கூறுகிறார்கள். பழனிநாடார் ஏற்கெனவே சுரண்டை பேரூராட்சித் தலைவராக இருந்தவர். தற்போது அவரது மருமகளே இப் பேரூராட்சி தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இதனால் சுரண்டை பேரூராட்சியில் பழனிநாடாருக்கு செல்வாக்கு இருப்பதாக அக் கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

அதிமுக பிரச்சாரம்

இதுபோல் அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸும் அக் கட்சியினரும் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கீழப்பாவூர் ஒன்றியத் தலைவராக செல்வமோகன்தாஸ் இருந்ததால் அவருக்கு அப்பகுதியில் செல்வாக்கு இருக்கிறது. மேலும் அவரது குடும்பத்தினர் இப்பகுதியில் கல்வி நிலையங்களை நடத்தி வருவதும் தங்களுக்கு பெரும் பலம் என்று அக்கட்சியினர் கருதுகின்றனர்.

எனினும், கீழப்பாவூர் ஒன்றியத் தலைவராக செல்வமோகன்தாஸின் செயல்பாட்டில் சிலர் அதிருப்தி தெரிவித்திருப்பதும், கூட்டணி பலம் இல்லாமல் இருப்பதும் பின்னடைவாக இருக்கிறது.

இவர்களுடன் களத்தில் உள்ள தமாகா வேட்பாளர் என்.டி.எஸ். சார்லஸ், பாஜக வேட்பாளர் பா. செல்வி ஆகியோரும் ஓரளவுக்கு கணிசமான வாக்குகளை பிரிக்கும் வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in