Published : 10 May 2016 01:59 PM
Last Updated : 10 May 2016 01:59 PM

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது: முரளிதர ராவ்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தமிழக பாஜகவின் மேலிடப் பார்வையாளர் முரளிதர ராவ் குற்றம் சாட்டினார்.

ராமநாதபுரம் மாவட்ட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரமக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழக பாஜக மேலிடப் பார்வை யாளருமான முரளிதர ராவ் பேசி யதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. திண்டுக்கல், வேலூர், ராமநாதபுரத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் நடந்துள்ளது. ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் துரை கண்ணன் நேற்று முன்தினம் தாக்கப்பட்டுள்ளார். அதிமுக அரசு இதை கண்டு கொள்ளவில்லை.

பாஜக அரசு அமைந்தால் மதுவை ஒழிக்கும். அதிமுக, திமுக அரசு மாறி, மாறி ஊழல் ஆட்சி நடத்தி வருகிறது. தமிழகத்தில் மணல், கனிமங்கள், மது, மாபியாக்களின் தலையீடு அரசுதான் நடக்கிறது.

ராகுல் காந்தி திமுக, காங்கிரஸ் இரட்டைக் குழந்தைகள் என்கிறார். இந்த இரு கட்சிகளையும் வங்காளவிரிகுடாவில் தூக்கி எறிய வேண்டும். காங்கிரஸ் அரசு அழகு முத்துக்கோன், முத்துராமலிங்கத் தேவர் போன்ற தியாகிகளை கண்டு கொள்ளவில்லை. தேவேந்திரகுல மக்கள் தங்களை தேவேந்திர குலம் என அறிவிக்க வேண்டும் என்று கேட்டனர். பாஜக அரசு அழகு முத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டது. சுபாஷ் சந்திரபோஸின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. தேவேந்திர குல மக்கள் என அறிவிக்க பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x