

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவ முன்வந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழகத்திலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
மேலும் மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார். இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்ததற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகிந்த ராஜபக்சே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பு வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை தங்களது நல்லெண்ணத்தை குறித்து நிற்கின்றது.
இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் நோங்கும் தங்களிற்கும், தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறப்பட்டுள்ளது.