Published : 05 May 2022 07:59 PM
Last Updated : 05 May 2022 07:59 PM

கோவை, மதுரை, திருச்சி, நெல்லையிலும் இனி ‘நம்ம ஊரு திருவிழா’ - அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட 27 அறிவிப்புகள்

சென்னை: பிரம்மாண்டமான நாட்டுப்புறக் கலை விழாவான 'நம்ம ஊரு திருவிழா' கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் நடத்துதல் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் கலை - பண்பாடு, அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த கலை - பண்பாடு, அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் மக்கள் கூடும் பிற இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, தமிழகத்தின் நாட்டுப்புற மற்றும் செவ்வியல் கலைகள் வளர்க்கப்படும், சென்னையிலும், தமிழகத்தின் 10 பிற மாவட்டங்களிலும் நாட்டுப்புறக் கலைகளைக் காட்சிப்படுத்தும் கலை விழாவான பொங்கல் விழா நடத்தப்படும்,சென்னை மற்றும் கும்பகோணம், அரசு கவின்கலைக் கல்லூரியில் உள்ள கட்டடங்களை மேம்படுத்துதல், புனரமைத்தல், சென்னை அருங்காட்சியகக் கலையரங்கில் மீண்டும் கலை நிகழ்ச்சிகளை நடத்த திறந்து வைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்;

மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் என்னும் ஈராண்டு முதுநிலைப் பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்துதல், முற்கால பாண்டியர் காலத்து பத்து குடைவரைக் கோயில்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவித்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் கலை - பண்பாடு, அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அவர் வெளியிட்ட 27 முக்கிய அறிவிப்புகள்:

கலை  பண்பாட்டுத் துறை

> பிரம்மாண்டமான நாட்டுப்புறக் கலை விழாவான 'நம்ம ஊரு திருவிழா' சென்னையோடு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும். இந்நிகழ்ச்சிகளில் பங்குபெறும் கலைஞர்கள் மாவட்ட அளவில் விழாக்கள் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

> தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான இணைய வழி சேவைகளைத் தொடங்கும்.

> பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் மக்கள் கூடும் பிற இடங்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, தமிழகத்தின் நாட்டுப்புற மற்றும் செவ்வியல் கலைகள் வளர்க்கப்படும்.

> தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்த வெளி கலையரங்கம் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

> கும்பகோணம், அரசு கவின்கலைக் கல்லூரியில் உள்ள கட்டடங்கள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> சென்னை, அரசு கவின்கலைக் கல்லூரியின் பாரம்பரிய கட்டடம் மற்றும் இதர கட்டடங்கள் ரூ.7.33 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

> கும்பகோணம், அரசு கவின் கலைக் கல்லூரியில் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் விதிமுறைகளின்படி ரூ.15.68 கோடி மதிப்பீட்டில் உரிய வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

> கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகள், இசைப்பள்ளிகள் மற்றும் ஜவகர் சிறுவர் மன்றங்களுக்கு இசைக் கருவிகள், மின்னணு சாதனங்கள், துணை சாதனங்கள், கணினிக் கூடங்கள், மென்பொருட்கள், ஒலிப்பதிவுக் கூடங்கள், தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் வழங்கி கற்பித்தலின் தரம் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

> வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.

> சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உள்ள பாரம்பரியக் கட்டடமான 'பிராடி கேசில்' ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மீட்டுருவாக்கம் செய்து புனரமைக்கப்படும்.

> மாமல்லபுரம், அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் சிற்ப அருங்காட்சியகம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களின் சிற்பங்களையும், ஓவியங்களையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் மையம் ஏற்படுத்தப்படும்.

> தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் அலுவலகக் கட்டடம், கலைஞர்கள் விடுதி, படங்கள் காட்சிக்கூடம் மற்றும் கலையரங்கம் ஆகியவை ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சென்னையிலும், தமிழகத்தின் 10 பிற மாவட்டங்களிலும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நாட்டுப்புறக் கலைகளைக் காட்சிப்படுத்தும் கலை விழாவான பொங்கல் விழா நடத்தப்படும்.

> தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் ஆண்டு அரசு நல்கை ரூ.3 கோடியாக உயர்த்தப்படும்.

அருங்காட்சியகங்கள் துறை

> சென்னை அரசு அருங்காட்சியக படிமக் கூடங்கள் மிகச் சிறந்த அருங்காட்சியக நடைமுறைகளின்படி, நல்ல அனுபவத்தை வழங்கும் வகையில் சிறப்பான காட்சியமைப்புகளுடன் ரூ.7 கோடி செலவில்
மேம்படுத்தப்படும்.

> சென்னை, அரசு அருங்காட்சியக சின்னமாகத் திகழ்கிற அருங்காட்சியகக் கலையரங்கின் குளிர்சாதன கருவிகள், மின்னொளி சாதனங்கள், இருக்கைகள் மற்றும் தீ பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவற்றை
மேம்படுத்தி மீண்டும் கலை நிகழ்ச்சிகளை நடத்த திறந்து வைப்பதற்கான பணிகள் ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

> காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் சுற்றுலா விளக்க கட்டடத்தில் மாற்றி அமைக்கப்பட்டு புதிய காட்சிக் கூடங்களுடன் மேம்படுத்தும் பணிகள் ரூ.2 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

> நாகப்பட்டினம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் தற்போது செயல்பட்டு வரும் தனியார் கட்டடத்தில் இருந்து அரசுக்கு சொந்தமான பாரம்பரிய கட்டடத்தை மீட்டுருவாக்கி அங்கு மாற்றியமைக்கும் பணிகள் ரூ.1.4 கோடி செலவில்
மேற்கொள்ளப்படும்.

> சென்னை, அரசு அருங்காட்சியக வேதியியப் பாதுகாப்பு ஆய்வகம் ரூ.50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

> சென்னை, அரசு அருங்காட்சியக பாரம்பரிய சுற்றுச் சுவரின் உடைந்த பகுதிகளை பழுதுபார்த் து மீட்டுருவாக்கும் பணிகள் ரூ.45 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

தொல்லியல் துறை

> சிந்துவெளி முத்திரைகளுக்கும் குறியீடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்வதற்காக பானை ஓடுகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் மற்றும் தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துகளை ஆவணப்படுத்துதல், மின்பதிப்பாக்கம் ஆகிய பணிகள் ரூ.77 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

> தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் " மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் "
என்னும் ஈராண்டு முதுநிலைப் பட்டயப் படிப்பு ரூ.80 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.

> பு தியதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

> அண்மையில் புயலால் சேதமடைந்த தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டை ரூ.65 லட்சம் செலவில் மறுசீரமைக்கப்படும்.

> முற்கால பாண்டியர் காலத்து பத்து குடைவரைக் கோயில்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக இந்த ஆண்டு அறிவிக்கப்படும்.

> மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் உதிரிச் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் போன்ற பல்வேறு தொல்லியல் கலைச்செல்வங்களை அதே இடத்திலோ அல்லது பாதுகாப்பான பிற இடத்திலோ வைத்து முறையாக பாதுகாக்க மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

> ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள சிந்துவெளி ஆய்வு மையத்திற்கு அகழாய்வு மற்றும் பிற திட்டங்கள் மூலம் தொல்லியல் துறையால் உருவாக்கப்பட்ட அறிவுச் செல்வத்தினை அடையாளம் காணுதல், இணைத்தல், தொகுத்தல், ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் பரப்புதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.89 லட்சம் நிதி மானியமாக வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x