Published : 05 May 2022 06:30 AM
Last Updated : 05 May 2022 06:30 AM

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

சென்னை: அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனால் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 4-ம் தேதி உருவானது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் 6-ம் தேதி ஓர் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

சூறாவளிக் காற்று வீசும்

இதன் தாக்கத்தால் 5-ம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும், 6-ம் தேதி அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

7-ம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 8-ம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 75 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

கனமழை வாய்ப்பு

5-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

6-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல்,திருச்சி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலை 5 டிகிரி உயரும்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக் கூடும். சென்னை நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x