Published : 05 May 2022 06:06 AM
Last Updated : 05 May 2022 06:06 AM
சென்னை: கோவையில் இருந்து ஷீரடிக்கு முதல்முறையாக தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக தனியார் ரயில் சேவை தொடக்க உள்ளது. கோவையைச் சேர்ந்த எம் அண்ட் சி என்ற நிறுவனம், கோவையில் இருந்து ஷீரடிக்கு தனியார் ஆன்மிக சுற்றுலா ரயிலை வரும் 17-ம் தேதி முதல் இயக்க உள்ளது.
கோவையில் இருந்து ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்த்ராலயம் வழியாக ஷீரடிக்கு செல்லும் இந்த பயணத்தில், ஒரே கட்டணத்தில் 4 நாட்களுக்கான உணவு மற்றும் ரயில் பயணத்துக்கு தேவையான படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வை, கிருமி நாசினி உள்ளிட்ட தினசரி பயன்பாட்டுப் பொருட்கள், ஷீரடியில் போக்குவரத்து வசதி, சாய் தரிசனத்துக்கான கட்டணம் என அனைத்தும் வழங்கப்படும்.
இரண்டு அடுக்கு ஏசி மற்றும் உயர்தர வசதிகளை கொண்ட இந்த வாராந்திர ரயில், செவ்வாய்க்கிழமை கோவையில் இருந்து புறப்பட்டு, புதன்கிழமை மாலை ஷீரடி சென்றடையும். வியாழக்கிழமை பாபா தரிசனம் முடித்த பிறகு அன்று மாலை புறப்பட்டு வெள்ளிக்கிழமை கோவை வந்தடையும்.
அவசர மருத்துவ தேவைகளுக்காக ஒரு மருத்துவர் ரயிலில் பயணிப்பார். பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய சேவை அதிகாரி மற்றும் உதவியாளர்களும் பயணிப்பர். மந்த்ராலயம் மற்றும் ஷீரடியில் அனுபவமிக்க வழிகாட்டிகள் மூலம் பயணிகளுக்கு வழி காட்டப்படும்.
இதுகுறித்து எம் அண்ட் சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உமேஷ் கூறும்போது, ‘‘கோவையைத் தொடர்ந்து சென்னை, மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும் ஆன்மிக குடும்ப சுற்றுலாப் பயண சேவையை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வருங்காலத்தில் காசி, ராமேசுவரம், திருப்பதி, கயா மற்றும் உத்தராகண்ட் ஆகிய இடங்களுக்கும் ஆன்மிக ரயில் சேவை தொடங்க உள்ளோம்’’ என்றார்
ஷீரடி பயணத்துக்கான கட்டணம் மற்றும் ரயில் புறப்படும் நேர அட்டவணை எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தெற்கு ரயில்வேயும் தனியார் ரயில் சேவை குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஊழியர் சங்கம் கண்டனம்
இதனிடையே, தனியார் ரயில் இயக்கப்படுவதற்கு கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து, தக்ஷிண ரயில்வே ஊழியர் சங்கத்தின் உதவி தலைவர் ஆர்.இளங்கோவன் கூறியதாவது:
கோவையில் இருந்து ஷீரடிக்கு தனியார் நிறுவனம் மூலம் ரயில் இயக்கப்படுவது என்பது ரயில்வேயை தனியார்மயமாக்குவதற்கான முதல்படியாகும். இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த ரயிலில் 2-ம் வகுப்பு ஏசி பெட்டி மட்டுமே உள்ளது.
ஐஆர்சிடிசி நிறுவனம் இயக்கும் சுற்றுலா ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணம், சாதாரண ரயில்களின் கட்டணத்தை ஒட்டியே இருக்கும். ஆனால், தனியார் ரயிலில் கட்டணத்தையும் சம்பந்தப்பட்ட நிறுவனமே நிர்ணயிக்க உள்ளது. அவர்கள் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், பயணிகளும் பாதிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT