Published : 05 May 2022 05:38 AM
Last Updated : 05 May 2022 05:38 AM

நீட் விலக்கு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் ஆளுநர்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: நீட் விலக்கு தொடர்பான சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று, இந்துசமய அறநிலையத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்துகொண்டிருந்தது. அப்போது, நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் ஒன்றை அவைக்குத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை அனைவரும் நன்கு அறிவீர்கள். இதன் முதல்படியாக நாம் அனைவரும் இணைந்து இந்தப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் கோரியிருந்தார். அதுகுறித்து அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே, பேரவையில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கு ஏதுவாக ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.

இதுதொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து, தாமதமின்றி நீட் விலக்கு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்தபோதும் இந்த சட்டமசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அனைத்துக் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இந்தத் தொடர் முயற்சிகளின் பலனாக ஒரு வரலாற்று நிகழ்வாக, நாம் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவைத்த நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கு ஏதுவாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார் என்ற தகவலை ஆளுநரின் செயலர் சில மணித்துளிகளுக்கு முன்பாக என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்தகட்டமாக மத்திய அரசை வலியுறுத்தி, இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x