Published : 05 May 2022 05:51 AM
Last Updated : 05 May 2022 05:51 AM

கச்சத் தீவுக்கு அனுமதி சீட்டு இன்றி சென்றுவர இலங்கையிடம் கோரிக்கை - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுவந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். உடன் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள். படம்: பு.க.பிரவீன்

சென்னை: தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கடந்த மாதம் 30-ம் தேதி இலங்கை சென்றார். அங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து, இலங்கை பயணம் குறித்து அண்ணாமலை கூறியதாவது:

கடந்த 4 நாட்களாக இலங்கைக்கு சென்று அங்குள்ள மலையகத் தமிழ் மக்களைச் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கை அதிபருக்கு அளிக்கும் மரியாதையை பிரதமர் மோடிக்கு அங்குள்ள மக்கள் அளிக்கிறார்கள். கடந்த 7 மாதங்களில் இந்தியா சார்பில் இலங்கைக்கு ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சென்றபோது, கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்துக்கு செல்லும் தமிழக மக்கள், அனுமதிச் சீட்டு இல்லாமல் செல்ல அனுமதிக்க வேண்டும், இலங்கை எல்லையை தாண்டுவதாக கூறி தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும், தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை தமிழ் அரசியல் கட்சிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முறையிடும்படி கோரிக்கை வைத்தேன்.

1974-ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி, தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் வலைகளைக் காயப் போடுவதற்கும், அதைத் தாண்டி நெடுந்தீவு வரை சென்று மீன் பிடிப்பதற்கும் அந்த ஒப்பந்தத்தின் 6-வது பிரிவு வகை செய்திருந்தது. அதனை இலங்கை அரசு 1976-ம்ஆண்டு ரத்து செய்துள்ளது. அந்த 6-வது பிரிவை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும்.

நீட் தேர்வு மசோதாவை ஆளுநர் மரபுப்படி குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். அதனை குடியரசுத் தலைவர் ரத்து செய்வார்.

கிழக்கு கடற்கரை சாலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதற்கு கருணாநிதி பெயரை வைக்க வேண்டாம். சென்னை நகரின் மையப்பகுதியில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைக்கு கருணாநிதி பெயரை வைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x