குமரியில் வள்ளுவர் சிலைக்கு லேசர் வெளிச்சம்: பேரவையில் அமைச்சர் வேலு தகவல்

குமரியில் வள்ளுவர் சிலைக்கு லேசர் வெளிச்சம்: பேரவையில் அமைச்சர் வேலு தகவல்

Published on

சென்னை: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, லேசர் விளக்குகள் மூலம் வெளிச்சம் பெறச்செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய்சுந்தரம், ‘‘சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் 3 படகுகளில் தினமும் 7,000 பேர் வரை பயணிக்கின்றனர்.

கடந்த ஆட்சியின்போது சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால், கூடுதலாக தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய 2 படகுகள் வாங்கப்பட்டன. ஆனால்,கரோனாவால் அவை இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த படகுகள் சுற்றுலாத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

2000-ம் ஆண்டில் திறக்கப்பட்ட வள்ளுவர் சிலை, சுற்றுலாத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை பொதுப்பணித் துறையே பராமரிக்க வேண்டும். மேலும், சென்னையில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் மரியாதை செய்யப்பட வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல குகன், பொதிகை உட்பட 3 படகுகள் உள்ளன. புதிதாக வாங்கப்பட்ட 2 படகுகளில் தாமிரபரணி 75 பயணிகளையும், திருவள்ளுவர் 150 பயணிகளையும் ஏற்றிச் செல்வதற்காக வாங்கப்பட்டவை.

முன்பு ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்துகொண்டிருந்தனர். கரோனாவுக்கு முன் 3 படகுகள் மூலம் ஆண்டுக்கு ரூ.12 கோடி வருவாய் இருந்தது. 2021-22-ல்வருவாய் ரூ.3.2 கோடியாக குறைந்துவிட்டது. பயணிகள் எண்ணிக்கையும் 5.5 லட்சமாக குறைந்துவிட்டது.

தற்போதுள்ள படகு நிறுத்தும் இடத்தில், புதிதாக வாங்கப்பட்ட படகை நிறுத்த இயலாது. எனவே, படகு நிறுத்தும் இடத்தை விரிவாக்கம் செய்ய ஒப்பந்தம் விடப்பட்டும், பணிகள் நடைபெறவில்லை. தற்போது அந்த ஒப்பந்ததாரரை அழைத்து, பணியை விரைவுபடுத்துமாறு கூறியுள்ளோம்.

படகு நிறுத்துமிடம் சீரமைப்பு

படகு நிறுத்தும் இடம் சீரமைக்கப்பட்டதும், சுற்றுலாத் துறை அல்லது பூம்புகார் கப்பல் கழகம் மூலம் படகு இயக்கப்படும். மேலும், திருவள்ளுவர் சிலையை தூய்மைப்படுத்தவும், லேசர் விளக்குகள் மூலம் வள்ளுவர் சிலையின் முகம் வரை வெளிச்சம் பெறச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளும்படி சுற்றுலாத்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் தினத்தன்று, கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்வது குறித்து முதல்வர் பரிசீலிப்பார்.

இவ்வாறு அமைச்சர் வேலு கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in