Published : 05 May 2022 07:31 AM
Last Updated : 05 May 2022 07:31 AM
சென்னை: சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் விக்னேஷ் மரணம் அடைந்த விவகாரத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தேசிய எஸ்.சி. ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹால்டர் கூறினார்.
தமிழகத்தில் பல்வேறு விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக நேற்று சென்னை வந்த அருண் ஹால்டர், சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவர் மரணம்அடைந்தது தொடர்பாக, அவரது குடும்பத்தினர், மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, சம்பவம் நடந்தகாவல் நிலையத்திலும் விசாரித்தார். பின்னர், சென்னை ஐஐடி-ல்எஸ்.சி. மாணவி, சக மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தினார். அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விக்னேஷ் எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறி, மூடி மறைக்கப் பார்த்தனர். அவர் எஸ்.சி. என்பதற்கான மாற்றுச் சான்றிதழை காண்பித்து, அந்த வழக்கை எஸ்.சி.வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யது, விசாரிக்குமாறு அறிவுறுத்தி உள்ளேன்.
விக்னேஷ் மரணத் தருவாயின்போது யாரெல்லாம் பணியில் இருந்தார்களோ, அவர்கள் மீதும் நடவடிக்கை தேவை. புழல் சிறையில் உள்ள விக்னேஷின் நண்பர் சுரேஷிடமும் விசாரணை நடத்த உள்ளோம்.
உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல, சென்னை ஐஐடிமாணவி பாலியல் வன்கொடுமைவிவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.விசாரணை என்ற பெயரில், புகார் கொடுத்தவரை தேவையின்றி தொந்தரவு செய்யக் கூடாது என்று போலீஸாருக்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்விரு வழக்குகள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் 15 நாட்களுக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும்.
தமிழ்நாட்டில் சாதிப் பிரச்சினை அதிகம் உள்ளது. ஓர் அமைச்சரே, சாதிப் பெயரைக் கூறி திட்டுகிறார். ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட நலத் துறையின் அமைச்சராக அவர்நியமிக்கப்பட்டுள்ளார். இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT