பங்குகள் விற்பனை செய்வதைக் கண்டித்து எல்ஐசி நிறுவன ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்தம்

எல்ஐசி நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கத்தினர். படம்: பு.க.பிரவீன்
எல்ஐசி நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கத்தினர். படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை: எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு கண்டனம் தெரிவித்து ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று 2 மணிநேரம் வெளிநடப்பு, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகிலஇந்திய காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் சென்னை மண்டலத்தின் தலைவர் ஜி.ஜெயராமன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் பேசியதாவது:

மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவீதப் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட முடிவுசெய்து, அதற்கான வேலையை செய்து வருகிறது. பங்கு வெளியீட்டின் முதல் படியாக நிறுவன முதலீட்டாளர்களுக்கு கடந்த 2-ம் தேதி அவர்களுக்கான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. சில்லறை முதலீட்டாளர்களுக்கான பங்கு வெளியீடு இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது.

எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதன்மூலம், பாலிசிதாரர்களுக்கு இழப்பு ஏற்படும்.

தற்போது எல்ஐசி நிறுவனத்தின் வருவாயில் 5 சதவீத ஈவுத்தொகை (டிவிடென்ட்) மத்திய அரசுக்கும், 95 சதவீதம் பாலிசிதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் ஈவுத் தொகை குறையக் கூடும். அத்துடன், தற்போது எல்ஐசி நிறுவனம் மத்திய அரசின் திட்டங்களில் முதலீடு செய்கிறது. இனிமேல் தனியார் முதலீட்டாளர்கள் இதைத் தடுக்கும் சூழ்நிலை ஏற்படும். இதனால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும், இந்த பங்கு வெளியீடு என்பது எல்ஐசி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

எல்ஐசி நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.1,900-ல் இருந்து ரூ.2,200வரை விற்பனை செய்ய முன்பு முடிவுசெய்யப்பட்டது. தற்போது பங்கின் மதிப்பைக் குறைத்து, ஒரு பங்கு ரூ.907 முதல் ரூ.949 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவன முதலீட்டாளர்களுக்காக இத்தொகை குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு எல்ஐசி நிறுவனப் பங்கு விற்பனையைக் கைவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் குமார் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 227 கிளைகளைச் சேர்ந்த 5 ஆயிரம்ஊழியர்களும், நாடு முழுவதும் 2,048 கிளைகளை சேர்ந்த 80 ஆயிரம் ஊழியர்களும் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in