Published : 05 May 2022 07:52 AM
Last Updated : 05 May 2022 07:52 AM
கோவை: கோவையில் தேசிய கயிறு வாரிய மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளதாக மத்திய கயிறு வாரியத் தலைவர் டி.குப்புராமு தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் டி.குப்புராமு நேற்று கூறியதாவது: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ‘தொழில் முனைவு இந்தியா' என்ற இயக்கத்தின்கீழ் தேசிய கயிறு வாரிய மாநாடு கோவையில் மே 5 (இன்று) மற்றும் 6-ம் தேதிகளில் (நாளை) நடைபெறுகிறது. மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையானது மத்திய அரசின் கயிறு வாரியத்துடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறது.
மாநாட்டில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே, இணைஅமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். தென்னை பயிரிடப்படும் மாநிலங்களின் தொழில் துறை அமைச்சர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கயிறு உற்பத்தியின் அடுத்தகட்ட மேம்பாடு, வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
குறிப்பாக, தென்னை பயிரிடுதல் மற்றும் தேங்காய் உற்பத்தியின் அவசியம், தென்னை மட்டைகளின் பயன்பாட்டை அதிகரித்தல், கயிறு துறையில் மதிப்பு கூட்டுப் பொருட்கள், மத்திய, மாநில அரசு துறைகளில் நார் பொருட்களின் கட்டாய கொள்முதல், ஏற்றுமதி வசதி வாய்ப்பு திட்டங்கள், நார் துறையில் உள்ள கடன் வசதி திட்டங்கள், கயிறு துறையில் பிரதமரின் வேலை வாய்ப்புக்கான திட்டங்கள், மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்களை அறிதல் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
மேலும், 2015–16-ம் நிதியாண்டு தொடங்கி 2018 –19-ம் நிதியாண்டு வரையிலான காலத்தில் தென்னை நார், கயிறு உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. புவிசார் கயிறு ஜவுளி பொருட்கள், நார் மரம், நார் மெத்தை, தரை விரிப்புகள் குறித்த 4 புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
நாட்டில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையிலும் கடந்த நிதியாண்டில் ரூ.3,800 கோடிக்கு கயிறு உற்பத்தி சார்ந்து ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. தென்னை சாகுபடியில் நாட்டில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
இந்தக் கயிறுப் பொருட்கள் இயற்கைச் சார்ந்தவை. சுற்றுச்சூழலுக்கு உதவியாக இருக்கக்கூடியவை. உலகம் முழுவதும் இதற்கான தேவை உள்ளது. உள்நாட்டு தேவையும் அதிகமாக உள்ளது.
கயிறு பொருட்களில் ‘பித்' என்பது தற்போது மணலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதும் தேவை உள்ள நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டின் தொடர்ச்சியாக மாரத்தான் போட்டி ‘ரன் ஃபார் காயர்' என்ற தலைப்பில் மே 6-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மத்திய கயிறு வாரிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT