Published : 05 May 2022 06:59 AM
Last Updated : 05 May 2022 06:59 AM

உதகையில் மே 20-ம் தேதி மலர்க் கண்காட்சி தொடக்கம்

உதகை தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி வரும் 20-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பார்வைக்கு வைக்கப்பட உள்ள பூந்தொட்டிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. படம்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் நேற்று கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் இந்தஆண்டு கோடை விழா 7-ம் தேதி தொடங்குகிறது. அதன்படி, 7, 8 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறிக் கண்காட்சி தொடங்குகிறது. 7-ம் தேதிமுதல் 31-ம் தேதி வரை சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அரங்கில், வனத்துறை மூலமாக புகைப்படக் கண்காட்சி நடத்தப்படும்.

வரும் 13, 14, 15 ஆகிய நாட்களில் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், 14, 15 ஆகிய நாட்களில் உதகை ரோஜா பூங்காவில் ரோஜா மலர்க் கண்காட்சியும், 28, 29 ஆகிய நாட்களில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சியும் நடைபெற உள்ளன.

கோடை விழாவில் பரதநாட்டியம், கிராமியக் கலைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பழங்குடியினர் கலாச்சார மையத்திலும், 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை உதகை அரசு தாவரவியல் பூங்காவிலும், 18 முதல் 31-ம் தேதி வரை படகு இல்லத்திலும் நடைபெறும்.

மே 7 முதல் 31-ம் தேதி வரை மகளிர் சுய உதவிக்குழு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஆவின், இன்ட்கோ சர்வ், டான்டீ ஆகியவற்றின் பொருட்காட்சி, உதகை பழங்குடியினர் கலாச்சார மைய தரை தளத்தில் நடைபெற உள்ளது. படகுப்போட்டி மே 19-ம் தேதி, உதகை ஏரியில் நடைபெற உள்ளது.

கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உதகை மலர்க் கண்காட்சி, 20 முதல் 24-ம் தேதி வரை உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x