

நாமக்கல்: துரிதமாக செயல்பட்டு கடத்தல் வழக்கில் 24 மணி நேரத்தில் சிறுமியை மீட்ட 7 தனிப்படையினருக்கு நாமக்கல் எஸ்பி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
நாமக்கல் அடுத்த காளிச்செடிப்பட்டியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அண்மையில் கடத்தப்பட்டார். குற்றவாளியை கண்டுப்பிடிக்க டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து, 24 மணி நேரத்தில் சிறுமியை மீட்டனர். இதுதொடர்பாக சிறுமியை கடத்திய தம்பதியை கைது செய்தனர். இந்நிலையில், 7 தனிப்படையில் இடம்பெற்ற 35 பேரை நாமக்கல் எஸ்பி இ.சாய் சரண் தேஜஸ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
இதுதொடர்பாக நாமக்கல் எஸ்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் அடுத்த காளிச்செட்டிப்பட்டியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் 24 மணி நேரத்தில் சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுமி கடத்தலில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்படுகிறது. கடனை திருப்பி செலுத்துவதில் சிறுமியின் பெற்றோர் மற்றும் கடத்தலில் ஈடுபட்டோருக்கும் இடையேயான முன் விரோதமே சிறுமி கடத்தலுக்கு காரணமாக அமைந்தது.
சிறுமியை மீட்க 7 தனிப்படை அமைக்கப் பட்டது. இத்தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இத்துரித நடவடிக்கையே சிறுமியை மீட்க காரணமாக அமைந்தது. இப்பணியில் சிறப்பாக செயல்பட்ட டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர் கள் உள்ளிட்ட 35 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது.
விதிமுறை மீறி செயல்படும் மதுபானக் கடை, மசாஜ் சென்டர்கள் உள்ளிட்டவை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகைப்பறிப்பு குற்றங்களில் தொடர்புடையவர்கள் விரைந்து கைது செய்யப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.