

ஓசூர்: தளி அருகே குதிரைப் பண்ணைக்கு சிறுத்தை வந்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவானதால், கிராமமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தளியில் அலிஉல்லாகான் (50) என்பவர் குதிரைப் பண்ணை நடத்தி வருகிறார். 20-க்கும் மேற்பட்ட குதிரைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி குதிரைப்பண்ணையின் அருகே சிறுத்தை தாக்கியதால் ஒரு பெண் குதிரை உயிரிழந்தது. குதிரையை சிறுத்தை தாக்கியதை உறுதிபடுத்தும் வகையில் குதிரைப் பண்ணை அருகே வனத்துறையினர் கண்காணிப்பு கேமராவை பொருத்தி கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இரவு வேளையில் மீண்டும் குதிரைப்பண்ணைக்கு சிறுத்தை வருவதும், அங்கு உயிரிழந்து கிடந்த குதிரையின் உடலை சாப்பிடும் காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் குதிரைப்பண்ணை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதனால் அச்சமடைந்துள்ள தளி பகுதி மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இரவு வேளையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் மக்கள் தனியாக வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்துள்ளனர்.