Published : 05 May 2022 06:18 AM
Last Updated : 05 May 2022 06:18 AM
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் திருத்தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் தொன்மை வாய்ந்த ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யக்கார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைணவ ஆச்சாரியரான ஸ்ரீராமானுஜர் தானுகந்த திருமேனியாகக் அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஏப். 16-ம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பிறகு ஸ்ரீ ஆதிகேசவ பெருமாளுக்கு சிம்ம வாகனம், கருட சேவை, யானை வாகனம், குதிரை வாகனம் மற்றும் திருத்தேர் என 10 நாட்கள் உற்சவம் ஏப். 25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து ராமானுஜரின் 1005-வது அவதார பிரம்மோற்சவம் ஏப்.26-ம் தேதி காலை முதல் தொடங்கியது. இதில் தங்க பல்லக்கு, யாழி வாகனம், சிம்ம வாகனம், அம்ச வாகனம், குதிரை வாகனம், சூரிய பிரபை, சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு ராமானுஜர் அருள்பாலித்தார். அவதார உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றது.
திருத்தேரானது தேரடி வீதி, திருவள்ளூர் சாலை, திருமங்கையாழ்வார் தெரு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சுமார் 2 கிமீ சென்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்திப் பரவசத்தில் கோஷம் எழுப்பினர். இந்தத் தேர் திருவிழாவுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து நுற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வழியெங்கும் ஏராளமான இடங்களில் ஆன்மிக அன்பர்கள் மூலம் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT