

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் அமைய இருந்த தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்கா திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
சென்னை பெசன்ட்நகரை சேர்ந்த கே.சரவணன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் உள்ள புழுதிவாக்கம் மற்றும் வாயலூரில் தமிழ்நாடு அரசின் டிட்கோ மற்றும் சிட்கோ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்கா (Tamilnadu Polymer Industries Park) 243.78 ஏக்கர் பரப்பளவில் ரூ.217 கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்துக்கு 2019-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது.
இத்திட்டத்துகான சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தில் தவறான தகவல்களை தமிழக அரசு அளித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத நிறுவனத்தைக் கொண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. வலசைப் பறவைகளின் வாழ்விடமான நீர்நிலையை அழித்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே இத்திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.
இம்மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
இத்திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்படுகிறது. உரிய திருத்தங்களைச் செய்து மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். திட்ட அமைவிடத்தில் இருந்த நீர்நிலையில் கொட்டப்பட்ட சாம்பல் கழிவுகளை அகற்றி மறுசீரமைப்பு செய்து சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ள புதிய ஆய்வு எல்லைகளை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்க வேண்டும்.
அதனடிப்படையிலேயே இத்திட்டத்துக்கான புதிய விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு திட்ட அமைவிடத்தை நேரில் ஆய்வு செய்து விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும். இப்பணிகள் அனைத்தையும் 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.