Published : 05 May 2022 06:47 AM
Last Updated : 05 May 2022 06:47 AM

தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை அரசியலாக்க வேண்டாம்; நல்ல முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுப்பார்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். நல்ல முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது: பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில், 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமரவைத்து எவ்வித கட்டாயப்படுத்தலும் இல்லாமல், மனமுவந்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் சுமந்து வரும் ஆன்மிக நிகழ்வு, பக்தி திருவிழா ஆகும். ஆனால் இந்த ஆண்டு வரும் மே 22-ம் தேதி பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு பிரிவு 25,26-ன்படி வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை அடிப்படையில் தடை விதிக்க முடியாது. எனவே ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதியளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கட்சித் தலைவர்கள் கருத்து

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): திருஞானசம்பந்தருக்கு இறைவன் பல்லக்கை கொடுத்தபோது, நாவுக்கரசரைப் பார்த்து இனி பல்லக்கில் ஏறமாட்டேன் என்றுசபதமேற்றார். உமாபதி சிவன் என்ற சந்நிதானமும் இதேபோல், பல்லக்கில் இறங்கி தவறு செய்து விட்டதாகக் கூறி இறங்கினார். அதேபோல், தந்தை பெரியாரின் கருத்தால் காஞ்சி சங்கராச்சாரியார் பல்லக்கில்ஏறுவதை தவிர்த்துவிட்டார். எனவே, இதை சரி என்றுசொல்வது எந்தவிதத்தில் சரியாகும். மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்.

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி: உணர்வுப்பூர்வமான விஷயத்தை எதிர்க்கட்சித் தலைவர் பேசியுள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவர் எப்போது எதிர்க்கட்சித் தலைவர் பேசினாலும், அமைச்சர்கள் பேச வேண்டியதை அவர் பேசுகிறார். கவுன்டர் கொடுத்து பேசுகிறார்.

அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு: இது தவறான கருத்து. உங்களுக்குப் பேச உரிமை உள்ளது போல் அவருக்கும் பேச உரிமை உண்டு. அதை அமைச்சர் கருத்து என்று கூறுவது எப்படி? உங்கள் கட்சிப் பெயரை குறிப்பிட்டு அவர் பேசவில்லை.

தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் பேசியதால் பேரவையில், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ஜி.கே.மணி (பாமக): தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதீனங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளன. ஆதீன குருநாதர்கள் வாழ்வியல் நெறிகளை வகுத்து கொடுக்கின்றனர். ஆதீனங்களில் பல்லக்கு தூக்குவது என்பது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்தான் நடைபெறுகிறது. தூக்கிச் செல்பவர்களும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்தான். தடை என்றால் மதங்களின் உள்ளே நுழைவதாகும். தேவாலயம், கிறிஸ்தவ பிரச்சினைக்குள் செல்வதும், இஸ்லாமிய பிரச்சினைகளுக்குள் செல்வதும் ஏற்புடையதாகாது. இது மதம் சார்ந்த பிரச்சினையில் தடைவிதிப்பது ஏற்புடையதாக இருக்காது.

நயினார் நாகேந்திரன் (பாஜக):தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அரசியலமைப்பு சட்டப்படி தடை விதிக்க முடியாது. மனிதனை மனிதன் தூக்க கூலிவாங்குவதுதான் தவறு. இது தாய், தந்தையை நாம் எப்படி தூக்கிப் போவோமோ அது போன்ற நிகழ்வு. இதற்கு தடை விதிப்பது ஏற்க முடியாத ஒன்றாகும். எனவே, பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்த முன்வர வேண்டும்.

தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்து பேசியதாவது: ஆதீனங்களுக்கு முதன்முதலில்‘தெய்வீகப் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். அவர் ஆட்சிக்குப்பின் தெய்வீகப் பேரவையை முடக்கி வைத்தபெருமை அடுத்த ஆட்சியாளர்களையேச் சாரும். ஆதீனங்களுக்கு 45 மடங்கள் உள்ளன. அதில் சைவம், வைணவம், சக்தி பீட வழிபாடுகள் உள்ளன. சைவத்தை ஆதீனங்களும், வைணவத்தை ஜீயர்களும், சக்திபீடத்தை காமாட்சி அம்மன் பீடத்தில் இருந்தும் வழிபடுகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைந்து அறநிலையத் துறையின் உயர்மட்டக் குழுவை அமைத்து, அவர்களை உறுப்பினராக்கியது, முதல்வர்தான். அவர்களுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். முதல்வரை நேரில் சந்தித்த ஆதீனம், ஆன்மிக அரசு என்று பாராட்டினார்.

தற்போது, இந்த நிகழ்வு தொடர்பாக ஆதீனத்தை தொடர்புகொண்டபோது, “மனிதனை மனிதனாக நினைக்கும் நடைமுறை பின்பற்றப்படும்” என்றார். எனவே சந்நிதானத்துக்கும், பட்டினப் பிரவேசத்துக்கும் பிரச்சினை இல்லாமல் நடுநிலையாக நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். இதை அரசியலாக்க வேண்டாம். ஆதினங்களுடன் அரசு பேசி சுமுக முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x