Published : 05 May 2022 06:54 AM
Last Updated : 05 May 2022 06:54 AM
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொடர்பான அறிவிப்புகளை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அறிவிக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு தலைமைச் செயலக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் செ.பீட்டர் அந்தோணிசாமி, செயலர் சி.ஆறுமுகம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் அனைத்துத் துறைகளிலும் முதல் மாநிலமாக, மக்கள் நலன் காப்பதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்வது தமிழகம்தான்.
எனினும், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் மேற்குவங்கம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்கள் முன்னோடியாக மாறிவிட்டன.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தங்களது அடிப்படை உரிமைகள் பறிபோகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து,பணப் பயன் பெறும் உரிமை காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (சிபிஎஸ்) உள்ள அரசு ஊழியர்களுக்கு, ஜிபிஎப்திட்டம்போல கடன் பெறும் வசதி இல்லை. இது அரசுக்கு நன்கு தெரியும்.சிபிஎஸ் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய செலவினங்களுக்கு, பெரும்பாலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பையே நம்பியுள்ளனர்.
மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போதெல்லாம், தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கும். ஆனால், தற்போது பிற மாநிலங்கள் அறிவித்த பிறகு, தாமதமாக அறிவிப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக அரசின் நிதிநிலையை அரசு ஊழியர்கள் நன்கு அறிவர்.முதல்வரின் வாக்குறுதிகளை அரசுஊழியர்கள் இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஈட்டியவிடுப்பு ஒப்படைப்பு காலவரையின்றி தள்ளிவைப்பு, அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதில் தாமதம், பல மாநிலங்கள் மீண்டும் பழையஓய்வூதியத் திட்டத்துக்கு திரும்பிஉள்ள நிலையில், தமிழக அரசு மவுனம் காப்பது போன்ற செயல்பாடுகள், அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளன.
அனைத்து அரசு ஊழியர்களும், தமிழக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை காலவரையின்றி தள்ளிவைத்து வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். மேலும், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டஅறிவிப்புகளை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT