Published : 05 May 2022 06:40 AM
Last Updated : 05 May 2022 06:40 AM

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று (மே 5)தொடங்கி மே 31-ம் தேதி வரைநடைபெறவுள்ளது. இந்த தேர்வை26.5 லட்சம் மாணவர்கள் எழுதஉள்ளனர். இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள். தேர்வு என்பது நீங்கள் கற்றுக் கொண்டதை மதிப்பிடும் நிகழ்வே தவிர, உங்களை மதிப்பிடுவதல்ல. அதனால் பொதுத்தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்: 10, 12-ம்வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவ, மாணவிகள்அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற எனது நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 18 லட்சம் மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 2 தேர்வுகள்தான் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். எனவே, இந்தத் தேர்வுக்கு வழக்கத்தைவிட கூடுதலாக கவனத்துடன் கடுமையாக உழைக்க வேண்டும். மேலும், மாணவர்கள் பொதுத்தேர்வு என்பதால் பதற்றம் அடையத் தேவையில்லை. கவனச்சிதறல்கள் இல்லாமல் தேர்வுகளை எழுதி, அதிக மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் சாதிக்க எனது வாழ்த்துகள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழகத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள். உங்கள் வாழ்வின் முக்கியமான தேர்வைப்பதற்றமின்றி, மிகுந்த நம்பிக்கையோடும், கவனத்தோடும் எழுதுங்கள். உங்களின் லட்சியங்களை நீங்கள் நினைத்தது போலவே அடைந்து, வாழ்வில் உயர வாழ்த்தி மகிழ்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: 10, 11 மற்றும் 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அனைவரும் நன்கு தேர்வு எழுதி ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் நற்பெயர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதேநேரம் மாணவர்கள் அனைவரும் கரோனா தொற்றில் இருந்துதங்களைப் பாதுகாத்துக் கொள்ள,அவசியம் முகக்கவசம் அணிந்துசெல்ல வேண்டும். மேலும், நேர்மையாக தேர்வு எழுத வேண்டும். அதேபோல், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு தமிழகஅரசும் பொதுத்தேர்வை முறையாக நடத்த வேண்டும்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: பொதுத்தேர்வுகள் குளறுபடியின்றி நடைபெறுவதையும், நீக்கப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படாமல் இருப்பதையும் அரசு தேர்வுத்துறை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், பொதுத்தேர்வுகள் சிறப்பாக நடைபெறவும், அதில் மாணவர்கள் சாதனை புரியவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா: பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி ஒன்று மட்டுமே எத்தகைய சூழல்களையும் சந்தித்து வெற்றி பெறுவதற்கு வழிசெய்யும். எனவே, மாணவர்கள் பொதுத்தேர்வை கண்டு கலங்காமல் தைரியமாக எழுத வேண்டும். பெற்றோரும் குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் பக்கபலமாக இருக்க வேணடும்.

சமக நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக தேர்வெழுதி வெற்றி பெற வாழ்த்துகள். பெற்றோர், ஆசிரியர்கள் வழங்கும் ஆலோசனைகளை ஏற்று தேர்வை எதிர்கொள்ள வேண்டும். கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், மாணவர்கள் நலன் கருதி தேர்வு மையங்களில் உரிய வசதிகளை செய்துதர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x