

காவல்துறை அத்துமீறல், சாதிக் கலவரம், சிறைச்சாலைகளில் கொடுமை உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் நடந்தால், உண்மை நில வரத்தை கண்டறிந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம் வழங்க 1952-ம் ஆண்டு விசாரணை கமிஷன் சட்டம் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க 1991-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஓய்வுபெற்ற நீதிபதி களை கொண்டு 38 விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டுள் ளன. இந்த விசாரணை கமிஷன்களின் அறிக்கை, அவற்றின் முடிவுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மதுரை எவிடன்ஸ் அமைப்பினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், 38 விசாரணை கமிஷன்களில் தடியடி, பாலியல் பலாத்காரம், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகளவு நடந்துள்ளதாக, அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
விசாரணை கமிஷன்களில் குற்றவாளிகள் மிகப்பெரிய பிழை செய்துள்ளனர் என போலீஸார் வலுவாகச் சொல்லவில்லை. 1992-ம் ஆண்டு வந்தவாசியில் ஒரு கோயில் வழிபாட்டு உரிமையில் தலித் சமூகத்தினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய தடியடியில் 73 தலித்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த சம்பவத்தை நீதிபதி வரதன் கமிஷன் விசாரணை செய்தது. அதில், தலித்கள் அவர்களுக் குள்ளேயே தீ வைத்து கொளுத் திக் கொண்டதால் அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கத் தேவை யில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
1999-ம் ஆண்டு வேலூரில் போக்குவரத்துக் கழகத் தொழி லாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 6 இடங்களில் தடியடி நடத்தப்பட்டது. இதில் ஒருவர் இறந்தார். விசா ரணை செய்த ராமானுஜம் கமிஷன், காவல்துறையினர் மீது எவ்வித தவறும் இல்லை. தொழிலாளர்கள் தான் தவறு செய்தனர் என அறிக்கை தாக்கல் செய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1995-ம் ஆண்டு 12 கிராமங்களிலும், நெல்லை மாவட்டத்தில் 8 கிராமங்களிலும் தலித்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் தலித்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்ந்து 3 மாதங்கள் நடந்தன.
கொடியங்குளம் கிராமத்தையே போலீஸார் அடித்து நொறுக்கியதில் 2 பேர் இறந்தனர். இதை விசாரித்த கோமதி நாயகம் கமிஷன், போலீஸார் எந்தவித வன்முறையிலும் ஈடுபட வில்லை என்றனர். இறந்த ஒரு வருக்கு ரூ.60 ஆயிரம், மற்றொ ருக்கு ரூ.15 ஆயிரம் கொடுத்தனர். மற்றவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவது தேவையற்றது என்ற னர். மேலும், இந்த மோதல் சாதிய மோதல் இல்லை. பொருளாதார ஏற்றதாழ்வு தொடர்பாக ஏற்பட்ட மோதல் எனத் தெரிவித்தனர்.
1991-ம் ஆண்டு சென்னை கால் நடை மருத்துவக் கல்லூரி மாணவர் களுக்கும், பல்லவன் போக்குவரத் துக் கழக ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸார் கல்லூரி வளாகத்தில் புகுந்து தடியடி நடத்தினர். 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். விசாரணை செய்த கிருஷ்ணசாமி கமிஷன், போலீஸ் செய்தது சரிதான், மாணவர்கள் மீது பிழை இருக்கிறது என்றது. 1994-ம் ஆண்டு ராமேசுவரம் காவல் நிலை யத்துக்கு விசாரணைக்கு அழைத் துச் சென்ற இரண்டு பெண் களை போலீஸார் பாலியல் பலாத் காரம் செய்தனர். விசாரித்த சமுத்திரப்பாண்டியன் கமிஷன் தலைமைக் காவலர் நாகரத்தினம், போலீஸ்காரர்கள் ஆறுமுகம், குமாரப்பா ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தது உண்மைதான் என்றும், போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கு பதிவு செய்ய வேண்டும். இரண்டு பெண்களுக்கு தலா ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் என்றது. இந்த கமிஷன் அறிக்கையில்தான் ஓரளவு நியாயம் கிடைத்தது.
கலவரச் சம்பவங்களால் கடந்த 24 ஆண்டுகளில் 5 ஆயிரம் நபர்கள் காவல்துறையினரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை கமிஷன்கள் எதுவுமே, பாதிக்கப்பட்ட பெரும் பான்மை மக்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவவில்லை. கண் துடைப்பாக மட்டுமே விசாரணை கமிஷன் முடிவுகள் இருக்கின்றன. அதனால், விசாரணை கமிஷன் அமைப்பு, அவற்றின் செயல்பாடு களை அரசிடம் ஒப்படைக்காமல் உச்ச நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போலீஸார் எந்த தவறும் செய்வதில்லை
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: போலீஸார் மீது நம்பிக்கை இல்லாத நிலையில்தான் விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன. இந்த விசாரணை கமிஷன்களை அமைப்பது அரசுதான். பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில்தான் கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன. கலவரத்தை சிலர் திட்டமிட்டே செய்வதும், அதன் உண்மையான காரணத்தை மறைத்து விசாரணை கமிஷன் கேட்பதால்தான், இத்தகைய நிலை ஏற்படுகிறது. யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ செயல்படுவதால் போலீஸாருக்கு எதுவும் கிடைத்து விடப்போவதில்லை. எந்த நிகழ்விலும், பொதுமக்களை காப்பதில் மட்டுமே போலீஸாரின் கவனம் முழுக்க இருக்கும். வீடியோ, புகைப்படம் இல்லாமல் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க இயலாது. போலீஸார் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக உண்மை வெளிவந்தே தீரும். 90 சதவீத சம்பவங்களில் போலீஸார் எந்த தவறும் செய்யவில்லை என்பதால்தான் கமிஷன் அறிக்கை எங்களுக்கு சாதகமாக இருப்பது போல சொல்கின்றனர் என்றார்.