Published : 05 May 2022 06:10 AM
Last Updated : 05 May 2022 06:10 AM
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உச்சப்பட்டியில் 1200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
திருமங்கலம் உச்சப்பட்டியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவர் அளித்த தகவலின்படி, மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத் தொல்லியல் ஆய்வாளருமான து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி உள்ளிட்ட குழுவினர் உச்சப்பட்டியில் கள ஆய்வு செய்தனர்.
அப்போது கிபி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சூலாயுதம் பொறித்த கிரந்த எழுத்துகள் கொண்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து உதவிப் பேராசிரியர் து.முனீஸ்வரன் கூறியதாவது: பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கோயில்களில் வழிபாடு செய்யவும், கோயில் பராமரிப்புகளுக்கும், மன்னர்கள் பல ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்களை கோயில்களுக்கு (இறையிலி) தானமாக வழங்கி உள்ளனர். அத்தகைய நிலங்களை அடையாளப்படுத்திட நிலத்தின் நான்கு மூலைகளிலும் எல்லைக்கற்களை நடுவது வழக்கம்.
குறிப்பாக சிவன் கோயிலுக்குரிய நிலதானம் (திரிசூலக் குறியீடு) திருநாமத்துக்காணி என்றும், பெருமாள் கோயிலுக்குரிய நில தானம் (சங்கு சக்கரம் குறியீடு) திருவிடையாட்டம் என்றும், சமணர் கோயிலுக்குரிய நிலதானம் (முக்குடை குறியீடு) பள்ளி சந்தம் எனவும் குறிப்பிடுவர்.
அதன்படி உச்சப்பட்டியில் மருதகாளியம்மன் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்ட 5 அடி நீளம் ஒன்றரை அடி அகலமுடைய கல்தூணில் 3 வரி கிரந்தம் எழுத்துகளுடன் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது. எழுத்துகள் அதிக தேய்மானத்தால்
கல்வெட்டு ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் படியெடுத்ததில், அவனி , ஸ்ரீமாறன், மடை, தம்மம், அவந்தி, வேந்தன் ஆகிய வார்த்தைகள் உள்ளன.
இக்கல்வெட்டு ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் ஆட்சிக்காலமாக (கிபி 835 முதல் 862) இருக்கலாம். கல்வெட்டு எழுத்தமைதியின்படி கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். சமீபத்தில் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் சிற்பம், விஜயநகர சின்னம் வராகன் கோட்டுருவம் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT