

புதுச்சேரி: புதுச்சேரியில் நலிவடைந்த கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் சுற்றுலாத்துறை சார்பில் முருங்கப்பாக்கத்தில் கலை மற்றும் கைவினை கிராமம் அமைக்கப்பட்டது. இங்குள்ள போட் ஹவுஸில் இருந்து இளையோருக்காக புது முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கைவினை கிராமத்தில் உள்ள படகு இல்ல மேலாளர் குமரன் கூறியதாவது: முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் உள்ள படகு இல்லத்திலிருந்து முதன்முறையாக அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் தொடர்பாக புது முயற்சியை இலவசமாக தொடங்கியுள்ளோம். முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்திலிருந்து படகில் அரியாங்குப்பம் ஆற்றில் புறப்பட்டு அங்குள்ள மாங்குரோவ் தீவை அடைகிறோம். தீவில் நடந்து சென்று அங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவோம்.
சுமார் ஒன்றரை கி.மீ தொலைவுக்கு இந்நடை பயணம் இருக்கும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பேக் வாட்டரில் வலை வீசி மீன்பிடிக்க பயிற்சி தருகிறோம். இளையோரை செல்போன் பயன்பாட்டிலிருந்து விடுவித்து சுற்றுச்சூழலை ரசிக்கவும், அதன் அருமையை உணரவும் இப்பயிற்சி உதவும். ஒரு வாரத்தில் 80 மாணவ, மாணவிகள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். தற்போது அரசு கல்லூரிகளுக்கு பயிற்சி தருகிறோம். இப்பயணத்துக்கு தேவையான பூட்ஸ், ஜாக்கெட் ஆகியவையும் தருகிறோம். மாங்குரோவ் காடுகளில் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து வந்து குப்பையில் சேர்க்கிறோம். இதன்மூலம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதில் விழிப்புணர்வு ஏற்படும்” என்றார்.
அரசு கல்லூரி மாணவிகள் கூறுகையில், “விவசாயத்துக்கு பிறகு மிக முக்கியத்தொழில் மீன்பிடித்தல். அது எளிதானது அல்ல என்பதை இந்தப் பயிற்சியில் உணர முடிந்தது. வலையை தூக்கி அதை சரியாக வீசி, மீன்களை பிடித்தோம். சொல்வது எளிதாக இருந்தாலும் அது மிக கடினமானது. மீன்களுடன் பிளாஸ்டிக் கழிவுகளும் வருவதை பார்க்க கஷ்டமாக இருந்தது. கால்வாயில் தூக்கி எறியும் பிளாஸ்டிக், கடலில் கலப்பது தெரிந்தது. குப்பைகளால் மாங்குரோவ் காடுகள் அழியும். முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக்கை கால்வாயில் கொட்டுவதை தடுத்தாலே பல பிரச்சினைகளை தடுக்க முடியும். முடிந்த வரை பிளாஸ்டிக் பைகளை தவிருங்கள், அதை கால்வாயில் கொட்டாதீர்கள் என்பதே எங்களுக்கு கிடைத்த முதல் விழிப்புணர்வு. இயற்கையின் பல விஷயங்களை இப்பயணத்தில் அறிய முடிந்தது” என்றனர் உற்சாகமாக.
இயற்கையின் பல விஷயங்களை இப்பயணத்தில் அறிய முடிந்தது.