Published : 14 May 2016 09:54 AM
Last Updated : 14 May 2016 09:54 AM

வாக்களிப்பதில் சிரமமா?

வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் நேரத்தில் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் பற்றி வாக்காளர்கள் பலர் தங்கள் அனுபவங்களை ‘தி இந்து’ நாளிதழுக்கு தெரிவித்துள்ளனர். அவற்றில் சில பிரச்சினைகள் பற்றி தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை பெற்றுள்ளோம். பிரச்சினைகளும் அதற்கான விளக்கங்களும் வருமாறு:

1. சி.ஜெபஸ் - ஸ்ரீபெரும்புதூர்

வாக்களிக்க வாக்குச்சாவடிக்குள் சென்றால், அங்கிருக்கும் கட்சிக்காரர்கள் தங்கள் கட்சிக்கு ஓட்டு கேட்டு தொல்லை தருகிறார்கள். வாக்குச்சாவடிக்குள் கட்சிக்காரர்கள் யாருக்கும் அனுமதி தர கூடாது.

வாக்குச்சாவடிக்குள் பூத் ஏஜென்ட்களுக்கு மட்டுமே அனுமதி. கட்சிக்காரர்கள் வாக்குச்சாவடி மையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் நிற்க வேண்டும்.

2. சி.தருமன் - செஞ்சி

வாக்குபதிவு இயந்திரம் இருக்குமிடத்தில் வெளிச்சம் இருக்க வேண்டும். வயதானவர்கள், பார்வைக் குறைபாடுடையவர்கள் சிரமமின்றி வாக்களிக்க வசதி செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு மையங்கள் பெரும்பாலும் பள்ளிகளாக இருப்பதால், அங்கு போதுமான மின்விளக்கு வசதி மற்றும் ஜன்னல் வெளிச்சம் உள்ளது. தேவையான இடங்களில் கூடுதல் விளக்குகள் பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

3. வி.எஸ்.குமணன் - கடலூர்

வாக்குச்சாவடிக்கு வாக்காளர் கொண்டு செல்லும் பூத் சிலிப்பை தேர்தல் அலுவலர்கள் வாங்கிக்கொள்கிறார்கள். திருப்பித் தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேர்தல் ஆணையம் அளிக்கும் பூத் சிலிப்பை தேர்தல் அலுவலர்கள் வாங்க கூடாது. அது தேர்தலில் வாக்களிப்பதற்கான அடையாள ஆவணம் மட்டுமே.

4. கே.நூர்முகமது - காரைக்குடி

நான் மாற்றுத்திறனாளி, என்னால் தனியாக சென்று வாக்களிக்க முடியாது. 100 சதவீத வாக்குப்பதிவை எதிர்பார்க்கும் தேர்தல் ஆணையம் நான் வாக்களிக்க வழி செய்யுமா?

வாக்குச்சாவடி வரை வரும் பட்சத்தில், உள்ளே செல்வதற்கு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண் வரிசையில் நிற்காமல் உள்ளே சென்று வாக்களிக்கலாம். பார்வையற்றவர், இயலாதவராக இருந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட உதவியாளர் ஒருவரை அழைத்து வரலாம். வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் உறுதிமொழி அளித்து, அவரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

5. எம்.முத்துலெட்சுமி - ஓசூர்

கடந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு வா, ரேஷன் அட்டையைக் கொண்டு வா என எங்களை நீண்ட நேரம் காக்க வைத்தார்கள். இந்த முறை பூத் சிலிப் மட்டும் கொண்டு போனால் போதுமா, வாக்காளர் அடையாள அட்டையையும் கொண்டு செல்ல வேண்டுமா?

தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள பூத் சிலிப்பில் புகைப்படம் இருப்பதால் அதை கொண்டுபோனால் போதுமானது. பூத் சிலிப் இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்களை பயன்படுத்தலாம்.

6. சோ.முத்துமாணிக்கம் -பழனி

மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்குள் செல்ல ஏதுவாக சாய்தள வசதியுடன் கூடிய பாதை அமைக்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் தனியான வாக்குச்சாவடியும், சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

சிரமம் நீங்கியது, எஸ்.காந்தி, மதுரை மேற்கு

மதுரை அரசரடி சொக்கலிங்கம் நகர் மெயின் ரோட்டில் உள்ளவர்களுக்கு இன்னும் பூத் சிலிப் வழங்கப்படவில்லை என்று கடந்த புதன்கிழமை ‘வாக்களிப்பதில் சிரமமா?’ பகுதியில் சொல்லியிருந்தேன். மறுநாளே எங்கள் பகுதியில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டது. வாக்களிப்பதில் மக்களுக்கு உள்ள சிரமம் நீங்க துணைநின்ற ‘தி இந்து’வுக்கு எங்களின் நன்றி.

அனுபவபூர்வமான உங்கள் சிரமங்களை பதிவு செய்ய...

044-42890011 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாக தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில் உங்கள் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறுமுனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதலின்படி உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.

இந்த தடவை சிக்கலின்றி செலுத்துவோம் நம் வாக்கை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x