Last Updated : 04 May, 2022 08:47 PM

 

Published : 04 May 2022 08:47 PM
Last Updated : 04 May 2022 08:47 PM

இந்து விரோத செயல்களை கடைபிடித்தால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சாலையில் நடமாட முடியாது: மன்னார்குடி ராமானுஜ ஜீயர்

தஞ்சாவூர்: "இந்து விரோத செயல்களைக் கடைபிடித்தால் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சாலையில் நடமாட முடியாது" என மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் சுவாமிகள் எச்சரிக்கை விடுத்தார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட ஜீயர் சுவாமிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ”பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று. ஸ்ரீரங்கத்தில் கூட ஆச்சாரியருக்கு நடத்திய பிரவேசத்தை எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தினர். பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கக் கூடிய அருகதை இந்த அரசுக்கும் கிடையாது. எந்த இயக்கத்துக்கும் கிடையாது.

பட்டினப் பிரவேசம் நிச்சயம் நடக்கும், அதைத் தடுக்க முடியாது. இந்து தருமத்துக்கு எதிரான துரோகிகளை தேசத் துரோகிகளாக கருதி எச்சரிக்கை விடுக்கிறேன். இந்து விரோதமான செயல்களை கடைபிடித்தால் ஆளுங்கட்சியின் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சாலையில் நடமாட முடியாது. ஆளுங்கட்சியினர் சாதி, மத, பேதம் இல்லை என கூறுகிறார்கள். கிறிஸ்துவ பாதிரியார் கன்னியாகுமரியிலிருந்து மதுரை வரையில், எங்களால் தான் அரசு உள்ளது. அரசை நாங்கள் தான் நடத்துகிறோம் என கூறி வந்தார். அவரை கைது செய்ய முடியவில்லை. இந்துக்களுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்பட வேண்டும்” என்றார்.

படங்கள்: ஆர். வெங்கடேஷ்

இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் கூறும்போது, “மதுரை ஆதீனத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மிரட்டி வரும் போக்கை கொண்டுள்ள ஆளும் கட்சியினர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதீனம் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ள நபர் எந்த கட்சியினராக இருந்தாலும், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள்தான். தொடர்ந்து ஆதீனத்துக்கு எதிராக அச்சுறுதல் விடுக்கும் போக்கு உள்ள நிலையில், ஆதீனத்தின் உயிருக்கு ஆபத்து வரும் எனில், அவரது உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

பிரதமர், உள்துறை அமைச்சர் தனி கவனம் செலுத்தி, ஆதீனத்தின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இந்து இயக்கங்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம். அதேசமயம், தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசம் என்கிற ஒரு மத சுதந்தரத்தில் அரசு தலையிட கூடாது, பக்தர்களாகிய எங்களால் கொண்டப்பட கூடியவர்கள் குருமகாசன்னிதானங்கள். மதா, பிதா, குரு, தெய்வம் என்கிற அடிப்படையில், 500 ஆண்டு காலமாக நடைபெறும் பாரம்பரிய விழாவை, தடுக்ககூடிய நோக்கத்தில் மனிதனை மனிதன் சுமப்பதா என்று, திரவிட இயக்க

கடவுள் மறுப்பு சிந்தனை உடையவர்களின் கோரிக்கை எல்லாம் இந்த அரசு புறம் தள்ளவேண்டும். இந்துக்களை மிரட்டி பார்க்கும், இந்த திராவிட இயக்கங்களுக்கு எதிராக தமிழக முழுவதும் உள்ள சிவனடியார்கள், ஆதீனங்கள், சமய தலைவர்கள் உள்ளிட்டவர்களை ஒன்றிணைத்து திருவாரூர் தேரோட்டம் போல பட்டினப் பிரவேசத்தை நடத்தியே தீருவோம். ஆதீனங்கள் தோளில் சுமக்க, அனைத்து அடியார்களும் தாங்கி செல்லுவோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x