Published : 04 May 2022 07:42 PM
Last Updated : 04 May 2022 07:42 PM

1000 திருக்கோயில்களில் ரூ.500 கோடியில் புனரமைப்பு பணிகள்: இந்து சமய அறநிலையத் துறையின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை: 1000 திருக்கோயில்களில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் திருப்பணி, பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த தகவல் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துதல், திருக்கோயில்களில் இறைபணியில் ஈடுப்டு இறைவனடிச் சேர்ந்த திருக்கோயில் யானைகளைச் சிறப்பிக்கும் வகையில் 10 திருக்கோயில்களில் நினைவு மண்டபங்கள் அமைத்தல், ஒருகால பூஜைத்திட்டத்தை இந்த ஆண்டு நிதி வசதியற்ற மேலும் 2000 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்துதல், 1000 திருக்கோயில்களில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் திருப்பணி, பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளுதல், திருக்கோயில்களுக்குச் சொந்தமான 40 திருக்குளங்களைச் சீரமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அவர் வெளியிட்ட 165 முக்கிய அறிவிப்புகளில் கவனிக்கத்தக்கவை:

> நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கெனவே 5 திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டமானது, தற்போது விரிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

> பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வழித்தடங்களில் திருக்கோயில் சார்பில் 20 நாட்களுக்கு, நாளொன்றுக்கு 10,000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

> 121 திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலைகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> திருக்கோயில்களுக்கு தானமாக வழங்கப்படுகின்ற கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய கோசாலை திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம் கோயில் பதாகை சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் பரபரப்பளவு நிலத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும். இதற்கென ரூ.20 கோடி செலவிடப்படும்.

> திருக்கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கான குளியல் தொட்டிகள் 18 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 8 திருக்கோயில்களில் புதிதாக குளியல் தொட்டிகள் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்படும்.

> திருக்கோயில்களில் இறைபணியில் ஈடுப்டு இறைவனடிச் சேர்ந்த திருக்கோயில் யானைகளைச் சிறப்பிக்கும் வகையில் முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் நினைவு மண்டபங்கள் அமைக்கப்படும்.

> திருக்கோயில்களில் " அன்னைத் தமிழில் அர்ச்சனை" செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டணச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான அர்ச்சனைக் கட்டணத்தில் 60 சதவீதம் அர்ச்சகருக்கு பங்குத் தொகையாக வழங்கப்படும்.

> திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றியும், திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையின்றியும் திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும்.

> ஒருகால பூஜைத்திட்டத்தின் கீழ் நிதி வசதியற்ற 12,959 திருக்கோயில்கள் பயன்பெறுகின்றன. இந்த ஆண்டு நிதி வசதியற்ற மேலும், 2000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.40 அரசு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்க்கப்படும் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படும்.

> இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5 சிவாலயங்கள் சார்பாக மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்.

> ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்.

> முதுநிலைத் திருக்கோயில்களில் 7 சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர். இதனை மேலும் விரிவுபடுத்தி மீதமுள்ள 41 முதுநிலைத் திருக்கோயில்களிலும் சுற்றுலா வழிகாட்டிகள் திருக்கோயில்கள் வாயிலாக நியமனம் செய்யப்படுவர்.

> தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் அடிப்படை வசதிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மேலும் இத்திருக்கோயிலின் திருப்பணிக்கான பணிகள் தொடங்கப்படும்.

> 48 முதுநிலைத் திருக்கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக திருக்கோயில் வளாகத்தில் மரத்தினாலான சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும்.

> கோவை மாவட்டம் மருதமலை, சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மலைப்பாதை ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

> 5 திருக்கோயில்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.

> சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் அமைக்கப்படும்.

> 21 திருக்கோயில்களில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் கட்டப்படும்.

> திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலைச் சிற்றுண்டி வழங்கப்படும்.

> தனியார் கட்டடங்களில் இயங்கிவரும் இத்துறையின் 5 இணை ஆணையர் அலுவலகங்களுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.

> திருக்கோயில்களுக்குச் சொந்தமான 40 திருக்குளங்கள் ரூ.35 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

> 13 திருக்கோயில்களுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் மரத்தினலான புதிய திருத்தேர்கள் செய்யப்படும்.

> திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர் உருவாக்கப்படும்.

> பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலுக்கு புதிய தங்கத்தேர் ரூ.8 கோடி செலவில் உருவாக்கப்படும்.

> திருச்சி மாவட்டம் உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில், கோவை மாவட்டம் ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில் ஆகியவற்றில் மூலவர் சன்னதிக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் வெள்ளிக்கதவுகள் அமைக்கப்படும்.

> 1000 திருக்கோயில்களில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் திருப்பணி, பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

> ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொன்மையான 80 திருக்கோயில்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அரசு நிதி மூலம் புனரமைப்பு செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.

> திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் கிழக்குப்பகுதி கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்புப்பணி ரூ.20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

> நகர்ப்புறங்களில் அமைந்துள்ள 200 சிறிய திருக்கோயில்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

> தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கலாச்சார மையம் முதற்கட்டமாக சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்படும். அம்மையத்தில் ஆன்மிக நூலகமும் அமைக்கப்படும். மேலும் மீட்கப்பட்ட தெய்வத் திருமேனிகள் அம்மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x