

காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் இன்று அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
''நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டேன். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 89 வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அஞ்சல் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை. பல அஞ்சல் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன.
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் கலியமலை கிராமத்தில் (81-வது வாக்குச் சாவடி) தேர்தல் நாளன்று வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது இந்த இயந்திரங்களின் திரையில் எண்ணிக்கை எதுவும் காட்டவில்லை.
இதனால் இந்த வாக்குச் சாவடிகளில் யாருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பதை பிரிண்ட் அவுட் எடுத்து தொடுத்தனர். இயந்திரத்தின் திரை வேலை செய்யாதபோது பிரிண்ட் அவுட் எடுக்கலாம் என்பது குறித்த தெளிவான விதிமுறைகள் எதுவும் இல்லை.
எனவே, கலியமலை கிராமத்தில் 81-வது வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும். அஞ்சல் வாக்குகள் மட்டுமல்லாது அனைத்து வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.