தமிழகத்தில் 2020-ல் 6,87,212 இறப்புகள் பதிவு: முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால்..?

தமிழகத்தில் 2020-ல் 6,87,212 இறப்புகள் பதிவு: முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால்..?
Updated on
2 min read

கரோனா காலம் தொடங்கியது முதல் தற்போது வரை மரணங்களின் எண்ணிக்கை தொடர்பான சர்ச்சைகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்தியாவில் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை பெரிய அளவு அதிகரித்து இருக்கலாம் என்று பல ஆய்வு அறிக்கைகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. இவற்றில் ஒரு சில அறிக்கைகளுக்கு மட்டுமே மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இறப்பு எண்ணிக்கை தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசின் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஆண்டுதோறும் வெளியிடும் மரணங்கள் தொடர்பான அறிக்கையை விரைந்து வெளியிட வேண்டும் என்று பல மருத்துவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், 2020-ம் ஆண்டு பிறப்பு, இறப்பு தொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி தமிழகத்தில் 2020-ம் ஆண்டு 6,87,212 மரணங்கள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

50,000 அதிகம்: தமிழகத்தில் 2020-ம் ஆண்டு 6,87,212 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது 2019-ம் ஆண்டை விட 53,315 அதிகம். குழந்தைகள் மரணங்களை பொறுத்தவரையில் 2020-ம் ஆண்டு 9,083 மரணங்களும், 2019-ம் ஆண்டு 10,463 மரணங்களும் பதிவாகியுள்ளன. 2020-ம் ஆண்டில் குழந்தைகள் மரணங்களின் எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளது.

2020-ம் ஆண்டு பதிவான மரணங்களில் 4,08,531 பேர் ஆண்கள், 2,78,681 பேர் பெண்கள் ஆகும். மேலும் கிராமபுறங்களில் 3,41,989 பேரும், நகர்புறங்களில் 3,45,223 மரணங்களும் பதிவாகியுள்ளது. குழந்தைகளைப் பொறுத்தவரையில் கிராமபுறங்களில் 1198, நகர்புறங்களில் 7885 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இதில் 5361 பேர் ஆண் குழந்தைகள், 3722 பேர் பெண் குழந்தைகள்.

வயது வாரியாக...

1 வயதுக்குள் 9083 பேர், 1 முதல் 4 வயது வரை உள்ள 1380 பேர், 4 முதல் 14 வயது வரை உள்ள 3233 பேர், 15 முதல் 24 வயது வரை உள்ள 12,992 பேர், 25 முதல் 34 வயது வரை உள்ள 22,335 பேர், 35 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 41,359 பேர், 45 முதல் 54 வயது வரை உள்ளவர்கள் 80,934 பேர், 55 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் 1,34,025 பேர், 65 முதல் 69 வயது வரை உள்ளவர்கள் 78,405 பேர், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3,03,466 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 73,243, குறைந்தபட்சமாக நீலகிரியில் 5219 மரணங்கள் பதிவாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 39,959, காஞ்சிபுரத்தில் 31,233, மதுரையில் 35,936, சேலத்தில் 33,337, வேலூரில் 34,831, நெல்லையில் 32,441 மரணங்கள் பதிவாகியுள்ளது.

பிறப்பு விகிதம்

இந்தியாவின் 2020-ம் ஆண்டுக்கான பிறப்பு, இறப்பு தொடர்பான மத்திய அரசின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-ம் ஆண்டு 2,42,22,444 பிறப்புகள் பதிவாகியுள்ளது. ஆனால் 2019-ம் ஆண்டு 2,48,20,886 பிறப்புகள் பதிவாகியுள்ளது. இதன்படி 2019-ஐ விட 2020-ம் ஆண்டில் 5,89,422 பிறப்புகள் குறைவாக வருகிறது. இதனால் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் 2020-ம் ஆண்டு 9,34,019 பிறப்புகள் பதிவாகியுள்ளது. ஆனால் 2019-ம் ஆண்டு 9,41,059 பிறப்புகள் பதிவாகி இருந்தது. இதன்படி 2020-ம் ஆண்டு 7240 பிறப்புகள் குறைவாக பதிவாகியுள்ளது. 2020-ம் ஆண்டின்படி தமிழகத்தில் பாலின விகிதம் 939 ஆக உள்ளது (1000 ஆண்களுக்கு 939 பெண்கள்). 2019-ம் ஆண்டு பிறப்பு விகதம் 942 ஆக இருந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in