Published : 04 May 2022 05:35 PM
Last Updated : 04 May 2022 05:35 PM

இ-சேவை மைய வலைதளத்தில் கூடுதல் சேவைகள்: தகவல் தொழில்நுட்பவியல் துறையின் 13 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைதளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகள் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த தகவல் தொழில்நுட்பவியல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கங்கைகொண்டான், திருநெல்வேலி, விஸ்வநாதபுரம், ஓசூரில் ஆயத்த அலுவலக இட வசதிகளை அமைத்தல், சென்னை. கோட்டூர்புரத்தில் உள்ள ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம், தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைதளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகள், நூல்கள் மின்னுருவாக்கம் மற்றும் தமிழ்
மின்னூலகத்தினை நவீனப்படுத்துதல் , தமிழ்நாடு கலாச்சார மின் நிலவரை ஏடு / தொகுப்பு, கன்னியாகுமரியில் புதிய தொழில்நுட்பக் கட்டடம் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிவித்தார். அவர் வெளியிட்ட 13 முக்கிய அறிவிப்புகள்:

> தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் வணிகச் செயல்முறை மேலாண்மை (BPM) நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான கொள்கை

தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் வணிகச் செயல்முறை மேலாண்மைத் (BPM) துறையானது இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஊக்கியாகவும், குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கான உந்து சக்தியாகவும் திகழ்கிறது. மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் வணிகச் செயல்முறை மேலாண்மை (BPM) நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு, ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும்.

> எல்கோசெஸ் (ELCOSEZ), கங்கைகொண்டான், திருநெல்வேலியில் ஆயத்த அலுவலக இடவசதி (Plug-and-Play facility)

> எல்கோசெஸ் (ELCOSEZ), விஸ்வநாதபுரம், ஓசூரில் ஆயத்த அலுவலக இட வசதி (Plug-and-Play facility)

> சென்னை. கோட்டூர்புரத்தில் உள்ள ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் (Integrated IT Signature Complex)

சென்னை. கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்குச் (Tamil Virtual Academy) சொந்தமான நிலத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து வேலைசெய்யும் இடத்துடன் கூடிய ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் 2.6 லட்சம் சதுர அடியில் ரூ.150 கோடி செலவினத்தில் அமைக்கப்படும். இதற்கான செலவினத்தை, எல்காட் நிறுவனம் ஏற்கும்.

> தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைதளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகள்

> தமிழ்நாடு டிஜிட்டல்மயமாக்கல் (DI TN ) வியூகம்

> தகவல் தொழில்நுட்பவியல் "தகவல் தொழில்நுட்பவியல் டிஜிட்டல் சேவைகள் துறை" மறுபெயரிடப்படும்

> கணினித் தமிழுக்கான மென்பொருட்கள் உருவாக்குதல்

> முதுநிலைத் தமிழியல் படிப்பு தொடங்குதல்

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வி முடித்த மாணவர்கள், தமது மேற்கல்வியைத் தொடரும் வகையிலும், தமிழ் இலக்கணம், இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம், கலைகள் போன்றவற்றை ஆழ்ந்து கற்று, தமிழ் மொழிப் புலமையை வெளிப்படுத்தும் வகையிலும், முதுநிலைத் தமிழியல் படிப்பு ரூ.29.00 இலட்சம் செலவினத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் துவக்கப்படும்.

> தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கு கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் இதர உபகரணங்கள்

> நூல்கள் மின்னுருவாக்கம் மற்றும் தமிழ் மின்னூலகத்தினை நவீனப்படுத்துதல்

தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு சார்ந்த அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற ஆவணங்களை மின்னுருவாக்கம் செய்து, மின்னூலகத்தில் (www.tamildigitallibrary.in ) அளித்து வருகிறது. மின்னுருவாக்கம் செய்யப்பட்ட 50,000 நூல்கள் கொண்ட மின்னூலகத்தை, இதுவரை 2,11,65,112 பயனர்கள் பார்வையிட்டுள்ளனர். இம்மின்னூலகம் 1 லட்சம் மின்னூல்களைக் கொண்ட பல்லூடக (Multimedia) மின்னூலகமாக ரூ. 1 கோடி செலவில் மேம்படுத்தி, நவீனப்படுத்தப்படும்.

> தமிழ்நாடு கலாச்சார மின் நிலவரை ஏடு / தொகுப்பு (Digital Cultural Atlas of Tamil Nadu)

> கன்னியாகுமரியில் புதிய தொழில்நுட்பக் கட்டடம்

கன்னியாகுமரியில் 50,000 சதுர அடியில் ஆயத்த அலுவலக இடவசதியுடன் (Plug - and - Play f a cility) கூடிய புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடம் ரூ.50 கோடி உத்தேச செலவினத்தில், உரிய ஆய்வுக்குப் பிறகு அமைக்கப்படும். இது தென் தமிழகத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவும். இதற்கான செலவினத்தை, எல்காட் நிறுவனம் ஏற்கும்.




FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x