Published : 04 May 2022 04:41 PM
Last Updated : 04 May 2022 04:41 PM

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நடவடிக்கை ரத்து: மீண்டும் டீன் ஆக ரத்தின வேல் பொறுப்பேற்றார்

ரத்தன வேல் | கோப்புப் படம்

மதுரை: ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட மகரிஷி சரகர் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ரத்தின வேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்ததால் அவர் மீண்டும் ‘டீன்’னாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த வாரம் 30-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர் பேரவை மாணவர்கள், "ஹிப்போகிரட்டிக்" உறுதிமொழிக்கு பதிலாக தேசிய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்த மாணவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட "மகரிஷி சரகர்" உறுதிமொழி ஏற்றனர்.

தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம், தேசிய மருத்துவ கவுன்சிலில் பரிந்துரையை பின்பற்ற வேண்டாம் என்றும், "ஹிப்போகிரட்டிக்" உறுதி மொழியைதான் வழக்கம்போல் ஏற்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பாததால் குழப்பமடைந்த 12க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழாவில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட "மகரிஷி சரகர்" உறுதி மொழி எடுக்கப்பட்டது.

ஆனால், அந்த நிகழ்வுகள் எதுவும் வெளிச்சத்திற்கு வரவில்லை. ஆனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்ட நிலையில் அவர் மாணவர்கள் "மகரிஷி சரகர்" உறுதிமொழி எடுப்பதை கண்டறிந்து டீன் ரத்தின வேலிடம் விழா மேடையிலே கேட்டுவிட்டார்.

பதறிப்போன டீன் ரத்தின வேல் அதே இடத்தில் என்னுடைய கவனத்திற்கு வராமலே தவறு நடந்து விட்டதாக வருத்தம் தெரிவித்தார். ஆனால், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாற்றி எடுக்கப்பட்ட உறுதிமொழி விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. அதனை தொடர்ந்துதான் பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் சர்ச்சைக்குரிய இந்த "மகரிஷி சரகர்" எடுக்கப்பட்ட விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆனால், மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தின வேல் மட்டுமே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மற்ற டீன்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சுகாதாரத்துறை செயலர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோர் தேசிய மருத்துவ கவுன்சில் மகரிஷி சரகர் உறுதிமொழியை பரிந்துரைத்த நிலையில் அதை மறுத்து தெளிவான சுற்றிக்கை அனுப்பாததாலே உறுதிமொழி எடுப்பு விவகாரத்தில் குழப்பமும், தவறுகள் நடந்தது தெரியவந்தது.

ஆனாலும், இந்த நிகழ்வுகள் அனைத்தும் யதார்த்தமாக நடந்ததா? அல்லது திட்டமிட்டடே உறுதிமொழிகள் எடுக்கப்பட்டதா? என்றும் சர்ச்சை எழுந்தது. ஆனால், அத்கையை விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பே இதுவரை தன்னுடைய பணிக்காலத்தில் எந்த சர்சையிலும் சிக்காத,
அரசியல் சார்பு இல்லாமல் சிறப்பாக பணியாற்றி மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தின வேலை மாற்றியது அனைத்து தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அவரது பணிமாற்றத்தால் மதுரை அரசு மருத்துவமனை கடந்த 3 நாளாக சோகத்தில் மூழ்கியது. மருத்துவமனைக்கு தினமும் சரியான நேரத்திற்கு வந்து உடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை எரிச்சலுடன் அணுகாமல் சிரித்த முகத்துடன் வேலை வாங்கி மதுரை அரசு மருத்துவமனையையும், மருத்துவக் கல்லூரியையும் பல்வேறு வகைகளில் குறுகிய காலத்தில் மேம்படுத்தினார்.

இருதயவியல் துறை மருத்துவராக பணிபுரிந்த போதே அவர் தென் தமிழகத்திலே முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து தமிழக அரசு பாராட்டை பெற்றவர். அதுமட்டுமில்லாது கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் உயிரை காப்பாற்ற காரணமாக இருந்தவர்.

அதனால், இவரது மருத்துவ சேவை, நேர்மைக்காக முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் ரத்தின வேல் இடமாறுதல் உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர்.

உறுதிமொழி விவகாரத்தில் நேரடியாக டீன் ரத்தின வேலுக்கு எந்த தொடர்பும் இல்லை, நாங்களும் உள்நோக்கத்துடன் அதனை படிக்க வில்லை என்று மருத்துவ மாணவர் பேரவை நிர்வாகிகள் வெளிப்படையாக பேட்டி அளித்து ஆட்சியர் அனீஸ் சேகரை சந்தித்தும் முறையிட்டனர். தமிழக மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு நேற்று முன்தினம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அனைத்து தரப்பினர் வேண்டுகோளை ஏற்று மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ஆக ரத்தின வேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் ரத்தின வேலின் கடந்த கால மருத்துவசேவை, அவரது நேர்மைக்கு அங்கீகாரம் வழங்கி மீண்டும் அதே பணியிடத்தில் பணியமர்த்தி, உறுதிமொழி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அரசின் நடவடிக்கை, பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x