Last Updated : 22 May, 2016 11:23 AM

 

Published : 22 May 2016 11:23 AM
Last Updated : 22 May 2016 11:23 AM

58 தொகுதிகளில் 32-ல் வெற்றியை கொடுத்து அதிமுகவை ஆதரித்த தென்மாவட்ட மக்கள்: அழகிரியின் தாக்கம் இல்லை

தென் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 58 தொகுதிகளில் 32 இடங்களில் அதிமுகவுக்கு வெற்றியைக் கொடுத்து ஆதரித்துள்ளனர்.

குமரி

தமிழகத்தில் திமுக அணிக்கு நூறு சதவீத வெற்றியைத் தந்துள்ள ஒரே மாவட்டம் குமரி. 3 முன்னாள் அமைச்சர்களை வீழ்த்தியது, அதிமுகவை நான்காவது இடத்துக்கு தள்ளியது (விளவங்கோடு) போன்ற ‘பெருமை’களும் இம்மாவட்டத்துக்கு உண்டு. கடந்த மக்களவைத் தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக, இம்முறை பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு பெருவாரியாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகளும், மீண்டும் உருவான காங்கிரஸ் கூட்டணியுமே காரணம். பாஜக 4 தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப்பிடித்திருக்கிறது.

நெல்லையில், மொத்தமுள்ள 10 தொகுதிகளில் இருகட்சிகளும் தலா 5 இடங்களை பெற்றிருக்கின்றன. சிறுபான்மையினர் வாக்குகள் அதிகளவில் திமுக அணிக்கு விழுந்திருப்பதை பாளையங்கோட்டை (மைதீன்கான்), கடையநல்லூர் (இயூமுலீ) தொகுதி வெற்றிகள் காட்டுகின்றன.

தூத்துக்குடி

மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை அதிமுகவுக்குத் கொடுத்திருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அதிமுகவினரின் கடுமையான களப்பணி காரணமாக தோற்றிருக்கிறார்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அதிமுகவினரின் ஒத்துழைப் பின்மையால் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் ‘பலமான’ அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோற்றிருக்கிறார் என்கிறார்கள்.

வைகோ போட்டியில் இருந்து விலகிய கோவில்பட்டியில் வெறும் 428 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றது. வைகோ இருந்திருந்தால், திமுக வென்றிருக்கும் என்கிறார்கள். திருச்சுழியில் உட்கட்சி பூசலையும் தாண்டி தங்கம்தென்னரசு (திமுக) வெற்றி வாகை சூடினார்.

ராமநாதபுரம், சிவகங்கை

அதிமுக பலமாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்கட்சி நான்கில் 3 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. திருவாடானையில் திமுக ஆதரவு வாக்குகளை ஜான்பாண்டியனும் (9,597), எஸ்டிபிஐ (4,782) கைப்பற்றியதால் வெளியூர்க்காரரான நடிகர் கருணாஸ் 8,696 வாக்குகள் வித்தியாசத்தில் வென் றார்.

தொகுதி மக்களின் அதிருப்தியும் அதிமுகவின் கவனிப்பாலும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் மலேசியா பாண்டியன் முதுகுளத்தூர் தொகுதியை வென்று திமுக அணியின் மானத்தைக் காப்பாற்றியிருக்கிறார்.

சீமானின் சொந்த மாவட்டம்

சிவகங்கையில் கனிமொழி சிபாரிசில் வேட்பாளரான சத்தியநாதனுக்கு மாவட்ட திமுகவினரின் ஒத்துழைப்பு சரியாக இல்லை எனக் கூறப்படுகிறது. அதிமுக வாக்குகளை ஸ்ரீதர்வாண்டையார் பிரித் தும்கூட, திமுக தோல்வி யைத் தழுவியது. திருப்பத்தூரில் பெரிய கருப்பனின் செல்வாக்கு அவரை வெற்றிபெற வைத்தது. காரைக் குடியில் காங்கிரஸ் கே.ஆர்.ராமசாமி அதிமுக வுக்கு இணையாக வாக் காளர்களை கவர்ந்த தால் கரை சேர்த்தார்.

நாம் தமிழர் சீமானின் சொந்த மாவட்டம் இது. இருந்தாலும், நான்கு தொகுதிகளிலும் சராசரியாக 2500 வாக்குகளையே அக்கட்சி பெற்றது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள பத்து தொகுதிகளில் இரண்டில் மட்டுமே திமுக தேறியிருக்கிறது. திமுகவின் உட்கட்சி பூசல், காங்கிரஸ், திமுக கூட்டணியில் இணக்கமான தேர்தல் பணி இல்லாமை உள்ளிட்டவையும் தோல்விக்கு காரணம்.

திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட வெளியூர்க்காரரான அமைச்சர் சுப.உதயகுமார், வடக்கில் போட்டியிட்ட ராஜன் செல்லப்பா போன்றோரின் வெற்றிக்கு அவர்களை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர்களே காரணம் என கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் சீனிவேல் மீது கட்சிக்குள்ளும் மக்களிடமும் அதிருப்தி இருந்தாலும், கடைசிநேர கவனிப்புகளால் வெற்றி சாத்தியமானது.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.கந்தசாமிக்கு விழுந்த கணிசமான வாக்கும், சேடபட்டி முத்தையாவின் மகன் திமுக மணிமாறன் அதிமுகவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனதும் அதிமுக வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.

அமைச்சர் செல்லூர் ராஜூ மீது அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டாலும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாசுகி பிரித்த கணிசமான வாக்குகள் அவரைக் காப்பாற்றின. உசிலம்பட்டியில் அதிமுக வாக்குகளைப் பதம் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பார்வர்டு பிளாக் கதிரவன், டெபாசிட் இழந்தார். சோழவந்தான் தொகுதியில் திமுக வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட தடுமாற்றம் அதிமுக வெற்றியை எளிதாக்கியது.

மதுரை மாவட்டத்தில் திமுக 2 தொகுதிகளை வென்ற தற்கு வேட்பாளர்களின் (பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகன் தியாகராஜன் மற்றும் பி.மூர்த்தி) சொந்த செல்வாக்கே காரணம். அழகிரியின் தாக்கம் மதுரையில் இல்லை.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தமுறை 4 இடங்களை பெற்றுள்ளது திமுக. முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி, அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் போட்டியிட்ட ஆத்தூர் தொகுதி கவனிக்கத்தக்க தொகுதியாக இருந்தது. வாக்காளர்களின் வீடு வரை உறவு வைத்திருந்த இ.பெரியசாமி, ‘இது பணத்துக்கும் பாசத்துக்கும் நடைபெறும் போராட்டம்’ என்று பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றுவிட்டார். ஒட்டன்சத்திரம் திமுக சக்கரபாணி, 5-வது முறையாக வென்றுள்ளார்.

தேனி

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவின் கோட்டையாகத் திகழ்ந்த தேனி, இம்முறையும் அதை நிரூபித்திருக்கிறது. கடந்த முறை ஒரு தொகுதியில் திமுக வென்றிருந்தது. இம்முறை அதையும் பறித்துக்கொண்டது அதிமுக. அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த தேர்தலில் 29,906 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இம்முறையோ கட்சியில் அவரது செல்வாக்கு குறைந்ததைப்போலவே வாக்கு வித்தியாசமும் குறைந்துவிட்டது. ஆண்டிபட்டியில், யாரை நிறுத்தினாலும் வெற்றிபெறுவது நிச்சயம் என்ற சூழலில் தங்கத்தமிழ்செல்வன் வென்றிருக்கிறார். தேனி அதிமுகவில் கோஷ்டி பிரச்சினை உண்டு என்றாலும், வெளியே வந்ததில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x