Published : 04 May 2022 04:22 PM
Last Updated : 04 May 2022 04:22 PM

பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: "20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களின் வழக்கில், நகர்வுகள் இல்லாத பட்சத்தில் நீதிமன்றமே அந்த நபர்களின் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.அதன் அடிப்படையில் பேரறிவாளன் விவகாரத்தை நாங்கள் ஏன் அணுகக் கூடாது?" என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் , கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் ஆளுநருக்கு தான் இருக்கிறது என வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரம் மாநில அரசின் உரிமை சார்ந்தது. மாநில அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்புகிறது என்றால், ஆளுநர் அதற்கு கட்டுப்பட வேண்டும் என்பது சட்ட விதிமுறைகள்.

இதனை உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன. எனவே இந்த வாதத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனர்.அப்போது மத்திய அரசு தரப்பில், அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்கெனவே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டார். இனி அதை ஏற்பது, நிராகரிப்பது அல்லது மீண்டும் அதனை ஆளுநருக்கே அனுப்பி அவரது முடிவுக்கு விட்டுவிடுவது என்ற மூன்று வாய்ப்புகள்தான் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது. எனவே இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அதனை சட்டத்திற்குட்பட்டு செய்வார் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர், அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததே தவறு என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பு மேற்கொண்டு எந்த ஒரு சட்டபூர்வ வாதங்களையும் வைப்பதற்கு இல்லை என்று கூறும்பட்சத்தில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றமே உத்தரவுகளை பிறப்பிக்கும், என தெரிவித்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் ஆளுநர் செயல்பாடு உள்ளிட்டவை இந்திய அரசியல் சாசனம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் மிக முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் இந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் பார்க்காமல் தனது விடுதலைக்கான வாய்ப்புகளை மட்டுமே பார்க்கின்றார்.

எனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களின் வழக்கில், நகர்வுகள் இல்லாதபட்சத்தில் நீதிமன்றமே அந்த நபர்களின் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.அதன் அடிப்படையில் பேரறிவாளன் விவகாரத்தை நாங்கள் ஏன் அணுகக் கூடாது ? எனக் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து நீதிபதிகள், அமைச்சரவை தீர்மானத்தின் மீதான ஆளுநரின் முடிவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டத்திற்கு உட்பட்டு பேரறிவாளன் விவகாரத்தில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம். மேலும் குடியரசுத் தலைவர், ஆளுநர் யாராக இருந்தாலும் அவர்களும் இந்திய அரசியல் சாசனத்திற்கும், சட்டத்துக்கும் உட்பட்டவர்கள் தான் எனக்கூறி வழக்கு மீதான விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x